சென்னை: கரூரைச் சேர்ந்த அரசுப் பள்ளி மாணவர்கள் எதிர்கால அறிவியல் யுகத்தில் முத்திரையைப் பதிக்கும் வகையில் தங்களது ஆசிரியரின் ஆலோசனையுடன் 30 கிராம் எடையிலான மிகச்சிறிய செயற்கைக்கோள் ஒன்றைத் தயாரித்துள்ளனர்.
வரும் 11ஆம் தேதி விண்ணில் ஏவப்பட உள்ள இந்த ெசயற்கைக்கோள் தயாரிப்பு முயற்சியை அறிவியல் விஞ்ஞானிகள் உள்ளிட்ட பலதரப்பட்ட மக்களும் பாராட்டி வருகின்றனர். இது பெரும் சாதனையாகவும் பார்க்கப்படுகின்றது.
இது இந்திய விண்வெளி ஆராய்ச்சியின் தந்தை என போற்றப்படும் விக்ரம் சாராபாயின் 100வது பிறந்தநாளான ஆகஸ்ட் 11ஆம் தேதி விண்ணில் ஏவப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.
தமிழகத்தில் மாணவர்களி டையே விண்வெளி குறித்த ஆர்வத்தைத் தூண்டும் வகையில் 'ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா' என்ற அமைப்பு 'விக்ரம் சாராபாய் விண்வெளி சவால்' என்ற போட்டியை அறிவித்திருந்தது.
இந்தப் போட்டியில் கலந்து கொண்ட கரூர் மாவட்டம் வெள்ளியணை அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் 9ஆம் வகுப்பு படிக்கும் மாணவர் நவீன்குமார் தலைமையில் மாணவர்கள் சுகந்த், பசுபதி, விஷ்ணு, ஜெகன் ஆகியோர் தங்களின் அறிவியல் ஆசிரியர் தனபால் வழிகாட்டுதலின்படி 30 கிராம் எடையில் சிறிய வகை செயற்கைக்கோள் ஒன்றைத் தயாரித்துள்ளனர்.
இந்த செயற்கைக்கோளை தயாரித்த மாணவர் குழுவின் தலைவர் நவீன்குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், "இன்றைய காலகட்டத்தில் தண்ணீர் பற்றாக்குறை கடுமையாக உள்ளது. நிலத்தடி நீர் குறைந்துபோனதே இதற்குக் காரணம். நிலத்தடி நீரை உறிஞ்சும் கருவேல மரத்தை பூமியிலிருந்து முற்றிலும் அழிக்கும் நோக்கில் இதை வடிவமைத்துள்ளோம்," எனக் கூறினார்.
சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் இஸ்ரோ துணைக்கோள மைய முன்னாள் திட்ட இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை சிறப்புரையாற்றுகையில், "வரும் ஆகஸ்ட் 11ஆம் தேதி தமிழகத்தைச் சார்ந்த அரசுப்பள்ளி மாணவர்களின் கண்டுபிடிப்பான 30 கிராம் அளவிலான செயற்கைக்கோளை விண்ணில் செலுத்த உள்ளோம்.
"இந்த சிறிய செயற்கைக்கோளை ராட்சத பலூன் உதவியுடன் சுமார் 15 கி.மீ உயரத்துக்கு விண்ணில் செலுத்தவும் செயற்கைக்கோள் செயல்பாட்டையும் அது அனுப்பும் படம், சமிக்ஞைகளை தரையில் உள்ள கட்டுப்பாட்டு அறையிலிருந்து கண்காணிக்கவும் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.
"இந்தப் பயிற்சி மூலம் இம் மாண வர்கள் எதிர்காலத்தில் விண்வெளித் திட்டங்களில் இஸ்ரோவுடன் இணைந்து செயல்படுவதற்கான உத்வேகம் கிடைக்கும்," என பாராட்டி வாழ்த்தினார்.

