கல்வித் துறைக்கு ரூ.37,000 கோடியை இறைக்கும் தமிழக அரசு

கல்வித் துறைக்கு ரூ.37,000 கோடியை இறைக்கும் தமிழக அரசு

1 mins read

சென்னை: கல்வித் துறைக்கு மட்டும் ரூ.37,000 கோடியை வாரி இறைத்து ெசலவிட உள்ளது தமிழக அரசு. பணப் பிரச்சினையால் ஒரு மாணவனின் படிப்பு தடைபட்டு போகக்கூடாது என்ற எண்ணத்தில் கல்வித் துறையில் அதிக அளவில் பணத்தைச் செலவிட அரசு முடிவு செய்துள்ளதாக தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

இவ்வளவு பெரிய தொகையின் முழுப் பயனும் தமிழக மாணவர்களைச் சென்றடையவேண்டும் என்பதே அனைத்து மக்களின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது. இடையில் அரசியல் கட்சியினர் சுரண்டலில் ஈடுபட்டால் கல்வி கற்கும் மாணவர்களை இது பெரிதும் பாதிக்கும் என்றும் கூறப்படுகிறது.

தமிழக அரசு சார்பில் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மை நலத்துறை, முஸ்லிம் மகளிர் சங்கத்தினர் ஆகியோர் இணைந்து விழா ஒன்றிற்கு ஏற்பாடு செய்திருந்தனர்.

விழாவில் முஸ்லிம் மகளிர் சங்கங்களைச் சேர்ந்த 500 பேருக்கு தலா ரூ.6,000 நிதியுதவி வழங்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து பேசிய ஓ.பன்னீர்செல்வம் கூறுகையில், "தமிழக அரசு மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வழியில் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.

"தமிழக அரசிற்கு கிடைக்கும் ஒட்டுமொத்த வருவாயில் மூன்றில் ஒரு பங்கு கல்விக்கு செலவிடப்பட்டு வருகிறது. அதன்படி தற்போது ஆண்டிற்கு ரூ.37,000 கோடி கல்விக்கு ஒதுக்கப்படுகிறது.

"இதன்மூலம் மாணவ, மாணவிகளுக்குத் தேவையான வசதிகளைச் செய்துகொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் கல்வியின் தரத்தை உயர்த்தவும் மாணவர்களின் சேர்க்கையை ஊக்கப்படுத்தவும் முயன்று வருகிறோம்," என்று தெரிவித்தார்.