சென்னை: மாமூல் வாங்கும் தமிழகப் போலிசார் மீது லஞ்ச ஒழிப்பு சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று டிஜிபி ஜே.கே.திரிபாதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
திரிபாதி முன்பு அனுப்பியது போலவே தமிழகம் முழுவதும் உள்ள போலிஸ் நிலையங்களுக்கு மீண்டும் ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
இந்த சுற்றறிக்கையில் மாமூல் வாங்கும் போலிசார் மீது லஞ்ச ஒழிப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் அவர் எச்சரித்துள்ளார்.
கடைகள், வணிக வளாகங்கள், நிறுவனங்களிடம் இருந்து மாமூல் வாங்குவது கடும் குற்றமாகக் கருதப்படும். இதுபோன்ற புகார்கள் நிரூபிக்கப்படும் பட்சத்தில் குறிப்பிட்ட போலிசார் மீது லஞ்ச ஒழிப்பு சட்டத்தின்கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திரிபாதியின் இந்த அதிரடி நடவடிக்கைகள் போலிசாரைக் கலங்கடித்து உள்ளன.
முன்னதாக, 'ஹெல்மெட்' அணியாத போலிசார் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்து சுற்றறிக்கை அனுப்பினார். அதன்பின்னரும் 'ஹெல்மெட்' அணியாமல் சென்ற போலிசார் பணி இடைநீக்கம் செய்யப்பட்டு வருகின்றனர்.
வரதட்சணை வாங்குவதும் கொடுப்பதும் குற்றம் என்றும் நன்கொடைகள், வெகுமதிகள், பரிசுப் பொருட்கள் போன்றவை வாங்குவது சட்டப்படி குற்றமாகக் கருதப்படும் என்றும் திரிபாதி மற்றொரு எச்சரிக்கை தகவல் அனுப்பினார்.

