தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வேலூரில் வென்றது திமுக

2 mins read
939ee3d3-d1b8-4e1d-803b-3bbe6d5d17ef
-

வேலூர்: தமிழ்நாட்டில் வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் இம்மாதம் 5ஆம் தேதி நடந்த தேர்தலில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் 8,141 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருக்கிறார். இந்த வெற்றியை அடுத்து நாடாளுமன்றத்தில் திமுக கூட்டணி உறுப்பினர்களின் எண்ணிக்கை 38 பேராக அதிகரித்து இருக்கிறது.

வேலூர் தொகுதியில் பதிவான 71.51 விழுக்காட்டு வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. கடைசி வரை ஒரே பரபரப்பாக இருந்த வாக்கு எண்ணிக்கை, திமுக, அதிமுக இரண்டு கட்சிகளையுமே மாறிமாறி அதிர்ச்சியிலும் மகிழ்ச்சியிலும் ஆழ்த்தி வந்தது. கடைசியில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் 485,340 வாக்குகளைப் பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏசி சண்முகம் 477,119 வாக்குகள் பெற்று வெற்றி வாய்ப்பை இழந்தார்.

வேலூரில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தீபலட்சுமி 26,995 வாக்குகளைத் திரட்டினார். கணக்கிட்டு பார்க்கையில் திமுக 47.3 விழுக்காடு, அதிமுக 46.51 விழுக்காடு, நாம் தமிழர் கட்சி 2.63 விழுக்காடு வாக்குகளைப் பெற்று இருக்கின்றன.வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே வெற்றி யாருக்கு என்பது பரபரப்பானது. முதல்சுற்றில் அதிமுக அதிக வாக்குகள் பெற்றது. ஆறாவது சுற்றில் அதிமுக 5,227 வாக்குகள் அதிகம் பெற்று இருந்தது. ஏழாவது சுற்றில் திமுக வேட்பாளர் முன்னணிக்கு வந்தார்.

தொடர்ந்து முன்னிலையைத் தக்கவைத்து வந்த கதிர்ஆனந்த், 17வது சுற்று முடிவில் 12,555 வாக்குகள் அதிகம் பெற்று இருந்தார். இறுதி சுற்று முடிந்ததும் திமுக வேட்பாளர் 8,221 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். இதனை அடுத்து திமுகவினர் வேலூர் வெற்றியைக் கொண்டாட தொடங்கினர்.

"இந்த வெற்றி பணபலத்தை யும் தாண்டி திமுக தலைவர் ஸ்டாலினுக்கு கிடைத்த வெற்றி," என்று கட்சியினர் பாராட்டினார்கள்.

வேலூரில் வென்று இருக்கும் திமுக வேட்பாளர் அந்தக் கட்சியின் பொருளாளரான துரைமுருகனின் புதல்வர் ஆவார்.

கடந்த ஏப்ரலில் தமிழ்நாட்டில் நாடாளுமன்றத் தேர்தல் நடந்தபோது வேலூரில் மட்டும் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. வாக்காளர்களுக்கு விநியோகிக்க இருந்ததாகக் கூறி தேர்தல் ஆணையம் அந்தத் தொகுதியில் பல இடங்களிலும் சோதனை நடத்தி பெரும் பணத்தைக் கைப்பற்றியது. அதனையடுத்து இந்தியாவிலேயே வேலூரில் மட்டும் தேர்தல் நிறுத்தப்பட்டது. பிறகு அந்தத் தொகுதியில் இம்மாதம் 5ஆம் தேதி தேர்தல் ஆணையம் வாக்களிப்பை நடத்தியது.