நீலகிரி: தென்மேற்குப் பருவமழை காரணமாக தமிழ்நாட்டின் மேற்கு மலைப் பகுதிகளில் கடும் மழை பெய்து வருகிறது. நீலகிரி, கோவை, தேனி மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு இருக்கின்றன.
இந்த நிலையில் அந்த மாவட்டங்களில் வரும் நாட்களில் இன்னும் அதிக மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு நிலையம் எச்சரித்து உள்ளது.
நிலவரத்தைச் சமாளிக்க போர்க்கால அடிப்படையில் பணிகள் நடப்பதாகவும் 155 முகாம்கள் தயார்நிலையில் வைக்கப்பட்டு இருப்பதாகவும் தமிழக அரசு தெரிவித்து உள்ளது. மீட்புப் பணியில் 35 குழுக்கள் ஈடுபட்டு இருப்பதாகவும் அது குறிப்பிட்டது.
இதுவரையில் நீலகிரியில் பாதிக்கப்பட்ட 2,000 பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு இருக்கிறார்கள்.
இந்த நிலையில் பெரும் பாதிப்புக்கு உள்ள நீலகிரி மாவட்டத்தில் மீட்புப் பணிகளில் உதவும்படி குன்னூரில் உள்ள ராணுவ முகாமின் உதவியை நீலகிரி மாவட்ட நிர்வாகம் நாடி இருக்கிறது.
நீலகிரி அவலாஞ்சியில் 24 மணி நேரத்தில் 92 செ.மீ. மழை கொட்டியதால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளானார்கள். கடந்த 100 ஆண்டுகளில் ஒரு நாளில் இந்த அளவுக்கு மழை பெய்தது இல்லை என்று கூறப்படுகிறது.
நீலகிரி, கோவை வட்டாரத்தில் பள்ளிகள் மூடப்பட்டு உள்ளன. மரங்கள் விழுந்ததாலும் நிலச்சரிவினாலும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள பகுதிகளில் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.
இதனிடையே, நீலகிரியில் தொடர் மழை காரணமாக வீடுகள் இடிந்ததில் மொத்தம் ஐந்து பேர் உயிரிழந்து இருக்கிறார்கள்.
நீலகிரி மாவட்டம் பைக்காராவில் மண் சரிவில் சிக்கி 8 வயது சிறுமி உயிரிழந்தார். காவிரியில் இருந்து தமிழகத்துக்கு அதிகமாக தண்ணீர் திறந்துவிடப்படுவதால் பல ஏரிகளும் அணைக்கட்டுகளும் நிரம்பி வருகிறது.
மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பவானிசாகர் அணை வேகமாக நிரம்பி வருவதால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பாபநாசம்- சேர்வலாறு அணைகளின் நீர்மட்டம் வேகமாக உயர்வதால் எச்சரிக்கையாக இருந்து கொள்ளும்படி மக்களிடம் தெரி விக்கப்பட்டுள்ளது.

