புதுச்சேரி: புதுச்சேரியில் உள்ள தூரக்கிழக்கு நாடுகளுக்கான பிரெஞ்சு ஆய்வு நிறுவனம் (EFEO), உலகின் தொன்மையான மொழி வளர்ச்சி சார்ந்து நூற்றாண்டு காலமாக இயங்கி வருகிறது.
ஆசிய நாகரிகங்கள் பற்றிய ஆராய்ச்சிகள் மேற்கொள்ள இந்நிறுவனம் கடந்த 1898ல் வியட்நாமில் தொடங்கப்பட்டது.
இந்தியாவில் தமிழ், சமஸ்கிருத மொழிகள் பற்றிய ஆய்வுப் பணிகளை பல்வேறு வகைகளில் இந்த அமைப்பினர் மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக கையெழுத்துப் பிரதிகளான சங்க இலக்கிய பிரதிகளின் ஓலைச்சுவடிகளை மின்மயமாக்கி வருகின்றனர்.
10 ஆண்டுகளுக்கு முன்னர் ஐரோப்பிய ஆராய்ச்சி மன்றத்தின் நிதியுதவியோடு 'நெட் தமிழ்' திட்டத்தை ஆரம்பித்த இவர்கள், சங்கத்தமிழ் இலக்கியங்களான பத்துப்பாட்டு, பதிணென்கீழ்க்கணக்கு நூல்கள், ஐங்குறுநூறு, புறநானூறு, தொல்காப்பியம், மணிப்பிரவாள நடையில் எழுதப்பட்ட தமிழ் உரைநடைகள் என்று அனைத்தையும் இத்திட்டத்தின்கீழ் மின்மயமாக்கி வருகின்றனர்.
கடந்த பத்து ஆண்டுகளாக தமிழ் ஓலைச்சுவடிகளை பாதுகாத்து வரும் நூலகங்கள், மடங்கள், ஆதீனங்களுக்கு சென்று அவர்களின் சேகரிப்பில் உள்ள ஓலைச்சுவடிகளை 'ஸ்கேன்' செய்தனர்.
ஆனால் அவற்றை இணையத்தில் பதிவேற்றி பொது பயன் பாட்டுக்குக் கொண்டுவரவில்லை என்று தூரக்கிழக்கு நாடுகளுக்கான பிரெஞ்சு ஆய்வு நிறுவனம் மீது புகார் எழுந்துள்ளது.
உலகத் தமிழர் பேரமைப்பு பொதுச்செயலர் நா.மு. தமிழ்மணி இதுதொடர்பான புகாரை ஆய்வு நிறுவனத்திற்கு அனுப்பினார். "உலக மக்களின் நிதி உதவியோடு நடந்த 'நெட் தமிழ்' திட்டப் பணிகள் அனைத்தும் உலக மக்களின் பொதுச்சொத்து. அதை தனக்கானது என சொந்தம் கொண்டாடுவது தவறு. இணையத்தில் பதிவேற்றம் செய்து பொதுவெளியில் வைக்க வேண்டும்," என அதில் கோரிக்கை விடுத்திருந்தார்.
அதற்குப் பதிலளித்த ஆய்வு நிறுவன இயக்குநர் டொமினிக் குட்டால், "ஆய்வுப் பணிக்காகத்தான் ஓலைச்சுவடிகளை 'ஸ்கேன்' செய்தோம். அதை அனைவரின் பயன்பாட்டுக்கு தருவது எங்களின் இறுதி முடிவே. ஓலைச்சுவடிகளை இணையத்தில் பதிவேற்றம் செய்வதில் சிக்கல் உள்ளது. இருப்பினும் நாங்கள் மின்மயமாக்கிய ஓலைச்சுவடிகளை ஆய்வு பயன்பாட்டுக்காகத் தர நாங்கள் மறுக்கமாட்டோம்," என்றார்.

