போலி ஏடிஎம் அட்டை தயாரித்து கொள்ளை: இருவர் கைது

போலி ஏடிஎம் அட்டை தயாரித்து கொள்ளை: இருவர் கைது

1 mins read

திருவொற்றியூர்: போலி ஏடிஎம் கார்டு தயாரித்து பண மோசடியில் ஈடுபட்ட வடமாநில வாலிபர்களை போலிசார் கைது செய்தனர். திருவொற்றியூர் எல்லையம்மன் கோயில் பகுதியில் வியாழக்கிழமை இரவு போலிசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்குள்ள ஒரு ஏடிஎம் வாசலில் சந்தேகப்படும்படியாக இரண்டு வடமாநில வாலிபர்கள் நின்றுகொண்டிருந்தனர். அவர்களை அழைத்து விசாரித்தபோது முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்துள்ளனர். அவர்களை சோதனையிட்டபோது 15 ஆயிரம் ரூபாய் வைத்திருந்தனர். தொடர்ந்து விசாரித்தபோது இரு வாலிபர்களும் தப்பியோட முயன்றனர். உடனே போலிசார் அவர்களை மடக்கிப் பிடித்து போலிஸ் நிலையம் கொண்டு சென்று உரிய முறையில் விசாரித்தனர்.

அவ்விருவரும் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த துர்கேஷ் பண்டிட் (28), பிரமோத் (29) என்பதும் மீஞ்சூர் அருகே அத்திப்பட்டு நகரில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வருவதும் விசாரணையில் தெரியவந்தது. ஏடிஎம் மையங்களுக்கு வரும் வயதானவர்கள் மற்றும் பணம் எடுக்கத் தெரியாதவர்களைக் குறிவைத்து ஏடிஎம்மில் பணம் எடுத்துத் தர உதவுவதுபோல் இவர்கள் நடித்துள்ளனர்.

அவர்களின் ஏடிஎம் அட்டையை எடுத்துக்கொண்டு வேறு அட்டையைக் கொடுத்து அனுப்பிய பின்னர் ரகசிய குறியீட்டு எண்ணை பயன்படுத்தி போலி ஏடிஎம் அட்டை தயாரித்து, அதன் மூலம் பல ஆயிரம் கொள்ளையடித்து வந்ததும் தெரிந்தது. இவர்களின் பின்னணியில் கொள்ளைக் கும்பல் உள்ளதா என போலிசார் விசாரிக்கின்றனர்.