புதுடெல்லி: வருமான வரித்துறையினர் தமிழ்நாட்டின் இரண்டு மதுபான நிறுவனங்களில் நடத்திய சோதனைகளில் ரூ. 700 கோடி வரி ஏய்ப்பு மோசடி கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது.
மதுபானத்தைத் தயாரிக்கப் பயன்படும் மூலப்பொ ருட்களின் விலையில் தில்லுமுல்லுகளைச் செய்து வரி ஏய்ப்புகளை அந்த நிறுவனங்கள் செய்து இருக்கின்றன என்று கூறப்படுகிறது.
புலன்விசாரணை அதிகாரிகள் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கோவா ஆகியவற்றில் செவ்வாய்க்கிழமையும் வெள்ளிக்கிழமையும் 62 இடங்களில் அதிரடியாக சோதனை நடத்தினார்கள்.
வரி ஏய்ப்பு மோசடி தகவல் கிடைத்ததை அடுத்து தாங்கள் எஸ்என்ஜெ டிஸ்டிலரிஸ் என்ற நிறுவனத்தைச் செவ்வாய்க்கிழமை சோதனையிட்டதாக வருமான வரித்துறை அதிகாரிகள் கூறினர்.
எஸ்என் ஜெயமுருகன் என்பவரின் எஸ்என்ஜெ குழுமத்திற்குச் சொந்தமான அந்த நிறுவனம், இரண்டு திரைப்படங்களைத் தயாரித்து இருப்பதாகவும் அந்தப் படங்களுக்கு திமுக தலைவர் மு. கருணாநிதி கதை-வசனம் எழுதி இருந்தார் என்றும் கூறப்படுகிறது.
அங்கு நடந்த சோதனையில் ரூ. 400 கோடி அளவுக்கு மோசடி கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
மதுபான தொழில்துறையைச் சேர்ந்த வேறு ஒரு நிறுவனத்திலும் அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். அங்கு ரூ. 300 கோடி அளவுக்கு வரிஏய்ப்பு மோசடி இடம்பெற்று இருக்கிறது என்று அதிகாரிகள் தெரிவித்தார்கள்.
என்றாலும் அந்த நிறுவனத்தின் பெயரை அவர்கள் வெளியிடவில்லை.
தமிழக அரசு டாஸ்மாக் என்ற நிறுவனத்தின் மூலம் பல நிறுவனங்களிடம் இருந்து மதுபானத்தைக் கொள்முதல் செய்கிறது. டாஸ்மாக் விற்பனை 2017-18 நிதி ஆண்டில் ரூ. 31,729 கோடியாக இருந்தது. அந்த நிதி ஆண்டில் டாஸ்மாக் மூலம் கிடைத்த வரி வருமானம் ரூ. 26,797 கோடியாகும்.
மதுபான நிறுவனங்களில் சோதனை தொடர்வதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வேளையில், சென்னை, கோவை, தஞ்சை, காரைக்கால் உள்ளிட்ட 55 இடங்களில் கடந்த 6ஆம் தேதி நடந்த சோதனையின்போது 4 கோடியே 50 லட்சம் ரூபாய் ரொக்கப் பணம் காரில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்தது.

