சென்னை: காஷ்மீர் விவகாரம் குறித்து நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ள கருத்து தமக்கு ஆச்சரியம் அளிப்பதாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆன்மிக உணர்வு என்பது மத உணர்வு என ரஜினிகாந்த் தவறாக புரிந்து கொண்டிருக்கிறாரோ என்கிற சந்தேகத்தை தமக்கு ஏற்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
"ஆன்மிகம் என்பது மதம் சார்ந்தது அல்ல. அநீதியை கண்டு சிலிர்த்து எழுகிற நமது கதா நாயகன் பாட்ஷா (ரஜினிகாந்த்) காஷ்மீரத்திற்கு ஒரு நீதி, பிற மாநிலங்களுக்கு ஒரு நீதி என்கிற அமித்ஷாவின் கொள்கைகளை ஏற்றுக்கொள்கிறரா?
"மோடியையும், அமித்ஷாவையும், கிருஷ்ணர் என்றும், அர்ஜுனர் என்றும் ரஜினி சொல்கிறார். மோடியும், அமித்ஷாவும் துரியோதனனும், சகுனியுமே ஆவார்கள். இவர்கள் கிருஷ்ணரும், அர்ஜுனரும் அல்ல.
"பலகோடி மக்களின் உரிமைகளை பறித்தவர்கள் எப்படி கிருஷ்ணரும், அர்ஜுனருமாக இருக்க முடியும்?" என்று கே.எஸ். அழகிரி கேள்வி எழுப்பி உள்ளார்.
ரஜினிகாந்திடம் இருந்து இதுபோன்ற கருத்தை தாம் எதிர்பார்க்கவில்லை என்று குறிப்பிட்டுள்ள அவர், ரஜினிகாந்த் தயவு செய்து மகாபாரதத்தை திரும்பவும் படிக்க வேண்டும் என்று தாம் கேட்டுக் கொள்வதாகத் தெரிவித்துள்ளார்.
"ரஜினியின் கருத்தை அறிந்த பிறகு நான் மிகவும் சோர்வடைந்தேன். ரஜினிகாந்த் இயல்பிலேயே மிகவும் நல்ல மனிதர். யாருக்கும் தீங்கு இழைக்காதவர். ஆன்மிகத்தின் மீது நாட்டம் கொண்டவர். எனவே, அவர் அப்படி சொல்லியிருப்பது ஆச்சரியம் அளித்துள்ளது," என்று கே.எஸ். அழகிரி மேலும் கூறியுள்ளார்.
இதற்கிடையே ரஜினியின் கருத்துக்கு நேர்மாறாக, காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளார் நடிகர் விஜய் சேதுபதி. இவ்விரு கருத்துக்களும் இணையத்தில் பல ரால் பகிரப்பட்டு வருகின்றன.

