சென்னை: அமைச்சர் பதவியைக் குறிவைத்து அதிமுக எம்எல்ஏக்கள் கட்சியின் மூத்த தலைவர்களுக்கு அழுத்தம் கொடுத்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனால் முதல்வர் பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் கடும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதாகக் கூறப்
படுகிறது.
அமைச்சர் மணிகண்டன் தமிழக அமைச்சரவையில் இருந்து அண்மையில் நீக்கப்பட்டார். இதற்கு முன்பு இளையர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்த பாலகிருஷ்ண ரெட்டி வழக்கு ஒன்றில் சிக்கி சிறைவாசம் அனுபவித்து வருகிறார்.
இதையடுத்து இருவரும் பொறுப்பேற்றிருந்த துறைகள் வேறு அமைச்சர்களுக்குக் கூடுதலாக ஒதுக்கப்பட்டன.
இந்நிலையில், அந்தத் துறைகளை தங்களுக்கு ஒதுக்கி, அமைச்சரவையில் தங்களையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என அதிமுக எம்எல்ஏக்கள் சிலர் கட்சித் தலைமையை வலியுறுத்தி வருவதாக கூறப்படுகிறது.
முதல்வர், துணை முதல்வர் என இரு தரப்பிலும் சில எம்எல்ஏக்கள் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.
இதனால் யாருக்கு அமைச்சர் பதவியைக் கொடுப்பது என முடிவெடுக்க இயலாமல் இருவரும் தீவிர யோசனையில் மூழ்கி இருப்பதாக தமிழக ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த விவகாரத்தால் கட்சியில் வேறு எந்தவிதமான புதுக்குழப்பங்களும் தலைதூக்காத வகையில் இருவரும் கவனமாகச் செயல்
படுவதாகவும் கூறப்படுகிறது.

