கொள்ளையரை விரட்டியடித்த தம்பதியர்க்கு வீர விருது

நெல்லை:  இரவு வேளையில் வீடு புகுந்த கொள்ளையர்களுடன் போராடி விரட்டியடித்த முதிய தம்பதியரை பல்வேறு தரப்பினரும் பாராட்டி உள்ளனர். இதையடுத்து இருவருக்கும் தமிழக அரசு வீரதீர விருது வழங்கும் எனத் தெரிகிறது.

நெல்லை மாவட்டம் கடையம் பகுதியில் உள்ள தோட்ட வீட்டில் வசிக்கிறார் சண்முகவேல். அண்மையில் இவரது வீட்டில் நுழைந்த இரு கொள்ளையர்கள், வீட்டு வாயிலில் நாற்காலியில் அமர்ந்திருந்த அவரது கழுத்தில் துண்டை போட்டு இறுக்கியுள்ளனர்.

சண்முகவேல் குரல் எழுப்பவே, பதறியடித்தபடி வெளியே வந்த மனைவி செந்தாமரை, கையில் அரிவாளுடன் இருந்த கொள்ளையர்களைக் கண்டதும் தன் கையில் வைத்திருந்த பொருளை அவர்கள் மீது வீசினார்.

பின்னர் வீட்டு வாயலில் கிடந்த காலணிகளை ஒவ்வொன்றாக எடுத்து கொள்ளையர்கள் முகத்தை நோக்கி வீசித் தாக்கினார். இதற்குள் சுதாரித்துக் கொண்ட சண்முகவேலும், நாற்காலிகள், மேசை என கையில் கிடைத்த, கண்ணில் பட்ட பொருட்களை வீசினார்.

ஒரு கட்டத்தில் கொள்ளையர்கள் கையில் இருந்த அரிவாளைப் பிடுங்கவும் கூட இத்தம்பதியினர் முயற்சித்தனர். இருவரின் ஆவேசமான தாக்குதலையும் எதிர்ப்பையும் எதிர்பாராத கொள்ளையர்கள் வேறு வழியின்றி அங்கிருந்து தப்பி ஓடினர்.

சண்முகவேல் வீட்டில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த இச்சம்பவம் தொடர்பான காணொளிக் காட்சி அண்மையில் வெளியானது. இதையடுத்து இத்தம்பதியருக்கு தமிழக அரசு வீரதீர விருது வழங்கும் எனத் தெரிகிறது.

 

 

இப்பகுதியில் மேலும் செய்திகள்

கைதான போலிஸ்காரர் மணிராஜன், கபடி பயிற்சியாளர் சீமான் மற்றும் தரகர் ராஜீவ்காந்தி. படம்: தமிழக ஊடகம்

07 Dec 2019

போலிசில் சேர பெரும் மோசடி: பலர் கைது; தீவிர விசாரணை