மதுரை: போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடுவோரிடம் அந்த இடத்திலேயே அபராதம் வசூலித்து ரசீது வழங்குவது நடைமுறையில் இருந்தது. இதை மாற்றி நவீன இ-சலான் கருவி மூலம் விதிமீறலுக்கு அபராதத்தொகை வசூலிக்கும் முறை தமிழக காவல்துறையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த மின்னிலக்கக் கருவி காவல்துறை, நீதிமன்றம், வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் மற்றும் அரசின் பொது இணையத்தளத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து விதியை மீறுவோரிடம் இனிமேல் காவல்துறையினர் கையில் பணம் பெற்று ரசீது தரக்கூடாது. ஏடிஎம், கடன் அட்டைகள் மூலமே அபராதத்தொகையை வசூலிக்க வேண்டும். இதற்கான ரசீதும் உடனே வழங்கப்படும்.
ஏடிஎம் அட்டை இல்லாதவர்கள் மின்னியல் ரசீதை பெற்று குறிப்பிட்ட நாட்களுக்குள் தபால் நிலையம், எஸ்பிஐ வங்கி, இ-சேவை மையம் அல்லது நீதிமன்றத்தில் அபராதத் தொகையைச் செலுத்தலாம்.
மதுரை நகருக்கு கேமராவுடன் கூடிய 32 மின்னிலக்க இ-சலான் கருவிகள் வழங்கப்பட்டுள்ளன. இதைப் பயன்படுத்தி போலிசார் நேற்று முன்தினம் முதல் போக்குவரத்து விதிமீறல்களுக்கு அபராதம் வசூலிக்கத் தொடங்கினர்.
இது குறித்து போக்குவரத்து போலிஸ் அதிகாரிகள் கூறுகையில், "விதிமீறலின்போது அபராதத்தை ரொக்கமாக வசூலித்தால் காவல்துறையினர் மீது சந்தேகம் எழுகிறது. நீண்டநேரம் காக்க வைப்பதாகவும் குற்றச்சாட்டு எழுகிறது. இதைத் தவிர்ப்பதற்காக ஏடிஎம் அட்டை, கடன் அட்டை ஆகியன மூலம் அபராதம் வசூலிக்கப்படும். ஏடிஎம் அட்டை இல்லாதோர் அபராத ரசீதை போலிசாரிடம் பெற்று இ-சேவை மையங்களில் மூன்று மாதங்களுக்குள் செலுத்தலாம். "அபராதம் செலுத்தவில்லை எனில் ஓட்டுநர் உரிமம் ரத்தாகும்." என்றனர்.

