வெள்ளக்காடான வேலூர்

வெள்ளக்காடான வேலூர்

3 mins read

வேலூர்: சென்னை, விழுப்புரம், கிருஷ்ணகிரி, வேலூர் உள்ளிட்ட இடங்களில் கடந்த மூன்று நாட்களாக மழை பெய்து வருகிறது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வட தமிழகம், கடலோர மாவட்டங்களில் இன்று வரை மழை நீடிக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

வேலூரில் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவாக 24 மணி நேரத்தில் 166 மி.மீ மழை நேற்று முன்தினம் பதிவாகியதாக தமிழ்நாடு வானிலை ஆய்வு நிலையம் தெரிவித்தது.

வேலூரில் நேற்று முன்தினம் இரவு முதல் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் வேலூர் நகரமே வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. மாநகரின் முக்கிய சாலைகளில் மழைநீர் ஆறுபோன்று ஓடியதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். பல இடங்களில் தண்ணீர் தேங்கி நின்றது.

பள்ளி, கல்லூரிகளை வெள்ளநீர் சூழ்ந்ததால் நேற்று வேலூர் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

ஆம்பூர் அருகே கானாற்றில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டதால் விவசாய நிலங்களுக்குள் தண்ணீர் புகுந்ததில் வேர்க்கடலை உள்ளிட்ட பயிர்கள் சேதமடைந்தன. வேலூர் பகுதியில் கனமழை தொடரும் என்று கூறப்படும் நிலையில், திருப்பத்தூர் மாவட்டம் ஜலகாம்பாறை அருவியில் வரலாறு காணாத அளவுக்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையே, ஆரணி அருகே உள்ள அன்மருதை பகுதியில் கடந்த ஒரு மாதமாக குடிநீர் வழங்கப்படவில்லை என 100க்கும் அதிகமானோர் நேற்று காலை ஆரணி-வந்தவாசி சாலையில் கொட்டும் மழையில் மறியலில் ஈடுபட்டனர். உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் உறுதியளித்ததை அடுத்து மக்கள் கலைந்து சென்றனர்.

கர்நாடக மாநிலத்தில் பெய்த பலத்த மழையினால் அங்குள்ள அணைகள் நிரம்பி வழிவதை அடுத்து, அங்குள்ள அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

அதனையொட்டி, மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்துவிடப்பட்டது.

மாயனூர் அணையில் இருந்து வினாடிக்கு 9,300 கன அடி தண்ணீர் முக்கொம்பு மேலணைக்கு வருகிறது. இந்த தண்ணீர் அப்படியே காவிரி ஆற்றில் திறந்து விடப்படுவதால் வறண்டு மணற்பரப்பாக காட்சி அளித்த காவிரி ஆற்றில் தற்போது தண்ணீர் பாய்ந்தோடுகிறது. பரந்து விரிந்து இருபுறமும் கரையைத் தொட்டபடி காவிரியில் தண்ணீர் செல்கிறது.

காவிரி ஆற்றில் தண்ணீர் பாய்ந்தோடுவதைக் காண ஸ்ரீரங்கம் காவிரி பாலத்தில் நேற்று பொதுமக்கள் திரண்டனர்.

காவிரி ஆற்றில் தண்ணீர் திறப்பு அதிகமாகும்போது தற்காலிகத் தடுப்புகளைத் தாண்டி தண்ணீர் வழிந்தோட வாய்ப்பு உள்ளதால் முக்கொம்பு மேலணையை அதிகாரிகள் பார்வையிட்டனர்.

இந்நிலையில், சென்னைக்குக் குடிநீர் வழங்கும் பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஏரிகளுக்கு மழை நீர் வந்து சேரவில்லை. மழைத் தண்ணீரை காய்ந்த தரைப் பகுதியே ஈர்த்துவிட்டது.

இதனால் ஏரிகளில் ஈரப்பதம் மட்டுமே உள்ளது. ஆங்காங்கே திட்டுத்திட்டாக மழைத் தண்ணீர் காணப்படுகிறது. இன்னும் 4 நாட்கள் தொடர்ந்து மழை பெய்தால் தான் ஏரிகளுக்கு தண்ணீர் வரும் என பொதுப் பணித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

வடதமிழகத்தில் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் சென்னையில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.