உறைகிணறுகள் அமைக்க தமிழக அரசு திட்டம்

உறைகிணறுகள் அமைக்க தமிழக அரசு திட்டம்

1 mins read

சென்னை: சென்னையில் 45,000 தெருக்களில் உறைகிணறுகள் அமைக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்த ஆண்டு மக்கள் எதிர்கொண்ட தண்ணீர்ப் பிரச்சினையைக் கருத்தில் கொண்டு, மழைநீரைச் சேமிக்கும் இத்திட்டத்திற்கான பணிகளை வடகிழக்குப் பருவமழை தொடங்குவதற்கு முன்பாகவே முடிக்க அதிகாரிகள் திட்டமிடுகின்றனர்.

சென்னையில் கடுமையாகச் சரிந்துபோன நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவதற்கு பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. வீடுகளில் மழை நீரைச் சேமிக்க வேண்டும் என்று விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அத்துடன் அனைத்து அரசு கட்டடங்களிலும் மழை நீரைச் சேமிக்கும் வசதியையும் அரசாங்கம் அமைத்து வருகிறது.

இந்நிலையில் சென்னையில் தெருக்களில் உறைகிணறுகள் அமைக்கும் திட்டத்தை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை சென்னை மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த மழை நீர் சேகரிப்புத் திட்டத்தை எதிர்காலத் தண்ணீர் பற்றாக்குறையைப் போக்கும் வகையில் செயல்படுத்த மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

இதன்படி சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களில் உள்ள 45,000 தெருக்களில் தேங்கும் மழைநீரை உறைகிணறுகள் அமைத்து நிலத்தடியில் சேமிக்க உள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் கூறியுள்ளனர். இது தொடர்பான பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. தமிழகத்தின் மற்ற பகுதிகளிலும் ஆங்காங்கு உறைகிணறுகளை அமைத்து மழை நீரைச் சேமிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.