திருச்சி: மத்திய அரசு பாதுகாப்புத் துறை நிறுவனங்களை கார்ப்பரேட் நிறுவனங்களாக மாற்றுவதற்கு முயற்சி செய்வதைக் கண்டித்து பாதுகாப்புத் துறை தொழிலாளர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக வரும் 20ஆம் தேதி முதல் ஒரு மாத காலத்திற்கு வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக பாதுகாப்புத் துறை தொழிலாளர்கள் அறிவித்துள்ளனர்.
இந்த நிலையில் திருவெறும்பூரில் மத்திய அரசைக் கண்டித்து துப்பாக்கித் தொழிற்சாலை கூட்டுக் குழு ஒருங்கிணைப்பாளர் சரவணன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
அதில் திருச்சி சிவா எம்.பி. கலந்துகொண்டு பேசினார். அவர் பேசுகையில், "பாதுகாப்புத் துறை நிறுவனங்களை கார்ப்பரேட் நிறுவனமாக மாற்றுவது பாதுகாப்புக்கு கேள்விக்குறியாகவும் அச்சுறுத்தலாகவும் இருக்கும். பாதுகாப்புத் துறை நிறுவனங்களை அரசு நடத்துவதற்கு லாப, நஷ்ட கணக்கு பார்க்கக்கூடாது.
"பொதுத்துறை நிறுவனச் சொத்துகளை விற்பதன் மூலம் ரூ.1 லட்சம் கோடி ஈட்டுவதற்கு முடிவு செய்துள்ளது அரசு. அதற்கு படைக்கலன் தொழிற்சாலையில் உள்ள இடங்களை விற்பதற்கு முடிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது.
"போர் வரும் காலத்தில் ராணுவத்திற்குத் தேவையான தளவாட கருவிகள் தயாரிப்பதை தனியாருக்குத் தாரைவார்க்க நினைப்பது தவறானதாகும். பாதுகாப்புத் துறை நிறுவனங்கள் தனியார் மயமாக்கப்பட்டால் ராணுவ ரகசியங்கள் வெளியில் போகும் அபாயம் உள்ளது. நாட்டின் பாதுகாப்பு, வருங்கால சந்ததிகளின் நலனைக் கருதி பாதுகாப்புத் துறை நிறுவனத்தை கார்ப்பரேட் நிறுவனமாக மாற்றுவதை மத்திய அரசு கைவிட வேண்டும்," என்றார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் துப்பாக்கித் தொழிற்சாலை, எச்.ஏ.பி.பி. தொழிற்சாலை மற்றும் பாய்லர் தொழிற்சாலையைச் சேர்ந்த தொழிற்சங்க நிர்வாகிகளும், தொழிலாளர்களும் கலந்துகொண்டனர்.

