மகளிர் காவல் நிலையத்தில் விசாரிக்கப்பட்ட பெண் மரணம்

மகளிர் காவல் நிலையத்தில் விசாரிக்கப்பட்ட பெண் மரணம்

1 mins read

வள்ளியூர்: நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் செயல்பட்டு வரும் தீயணைப்பு நிலையத்தில் தீயணைப்பு வீரராக கிறிஸ்டோபர் என்பவர் பணியாற்றி வருகிறார். நாகர்கோவிலைச் சேர்ந்த இவர் ஒரு சிறுமியைப் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூடங்குளம் போலிஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலிசார் வழக்குப் பதிவு செய்தனர். தலைமறைவான அவரைப் பிடிக்கும் முயற்சியில் போலிசார் ஈடுபட்டனர்.

பூமத்திவிளையைச் சேர்ந்த இஸ்ரவேல் என்பவரின் மனைவி லீலாபாய், 45, என்ற பெண்ணுடன் அவர் அடிக்கடி பேசியதைக் கண்டுபிடித்த போலிசார் லீலாபாயை வள்ளியூர் மகளிர் காவல் நிலையத்திற்கு அழைத்துவந்து விசாரணை செய்தனர். இந்நிலையில் லீலாபாய் நேற்று அதிகாலை திடீரென ரத்தவாந்தி எடுத்ததாக கூறப்படுகிறது. அருகில் உள்ள மருத்துவமனையில் சிக்கிச்சைக்குப் பிறகு, மேல் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் லீலாபாய் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.