தமிழகத்தின் 12 மாவட்டங்களில் தொடரும் கனமழை

தமிழகத்தின் 12 மாவட்டங்களில் தொடரும் கனமழை

2 mins read
f2b4b7a0-cf49-45cd-b79e-bebb1ec5c1f9
-

சென்னை: தமிழகத்தின் கடலூர், விழுப்புரம், மதுரை, திருச்சி, திருவாரூர் உள்பட 12 மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழை முதல் மிக பலத்த கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையின் பல இடங்களில் நேற்று காலையிலும் மதிய வேளையிலும் மழை தொடர்ந்தது. இதனால் நகர் முழுவதும் குளிர்ச்சியான வானிலை நிலவியது.

இந்நிலையில் தமிழகத்தின் 12 மாவட்டங்களில் இரு நாட்களுக்கு மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, தென்மேற்குப் பருவக்காற்றின் தாக்கம் காரணமாக தமிழகம் முழுவதும் பெரும்பாலான பகுதிகளில் மழைபெய்துவருகிறது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள செய்திக் குறிப்பில், "தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வெப்பச்சலனம், வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் அடுத்த இரு நாட்களுக்கு மழை நீடிக்கும்.

"அடுத்த 48 மணி நேரத்தில் கடலூர், விழுப்புரம், மதுரை, திருச்சி, திருவாரூர், சிவகங்கை, சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலூர், திருவண்ணாமலை ஆகிய 12 மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும்," என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

சென்னையைப் பொறுத்தவரை ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வேலூரில் ராணிப்பேட்டை, ஆற்காடு, வாலாஜாபேட்டை, சோளிங்கர் பகுதிகளில் சுமார் மூன்று மணி நேரம் கனமழை கொட்டித் தீர்த்தது.

திருச்சி மாவட்டத்தில் ஸ்ரீரங்கம், விமான நிலையம், பாலக்கரை, சத்திரம் பேருந்து நிலையம், காந்தி மார்க்கெட் என அனைத்துப் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய கனமழை கொட்டித் தீர்த்தது. புறநகர்ப் பகுதிகளான மண்ணச்சநல்லூர், லால்குடி, துவாக்குடி, துறையூர் உள்ளிட்ட பல இடங்களிலும் மழை பெய்ததால் சாலைகளில் வெள்ளமாக தண்ணீர் தேங்கியது.

கொடைக்கானல் மலைப் பகுதிகளில் நேற்று காலை முதல் சாரல் மழை பெய்தது. தருமபுரி மாவட்டத்தில் அரூர், பொம்மிடி, கடத்தூர், ஒடசல்பட்டி, உள்ளிட்ட பகுதிகளில் பெய்த தொடர்மழையால் ஆடிப்பட்டத்தில் ஆவணியில் பயிர் சாகுபடி செய்யும் பணியில் பலரும் ஈடுபட்டனர். ஏற்கெனவே உழவு ஓட்டியவர்கள் சோளம், மரவள்ளி, சிறுதானியங்கள் விதைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் குன்னம், வேப்பந்தட்டை, பாடாலூர் உள்ளிட்ட பல இடங்களிலும் கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம், புவனகிரி, காட்டுமன்னார்கோவில் உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை பெய்ததால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.