நாகர்கோவில்: குமரி மாவட்டம், ராஜாக்கமங்கலம் அருகே உள்ள அழிக்கால் பகுதியில் திடீரென்று ஆர்ப்பரித்து வந்த கடல் அலைகளின் சீற்றம் காரணமாக நூற்றுக்
கணக்கான வீடுகளுக்குள் கடல் நீர் புகுந்ததால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளானார்கள். அவர்கள் நள்ளிரவு முதல் விடிய விடிய தூங்காமல் தவித்தனர்.
அப்பகுதி மக்கள் பலரும் தங்கள் வீடுகளில் புகுந்த வெள்ள நீரை பெரும் பாடுபட்டு வெளியேற்றினர்.
குமரி மாவட்டத்தில் ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் கடல் சீற்றமாகக் காணப்படும். இந்த ஆண்டும் அந்த நிலைமை தொடர்வதால் மீனவர்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.
அழிக்கால் பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவில் கடல் சீற்றம் அதிகரித்ததால் ராட்சத அலைகள் 2 மீட்டர் முதல் 3 மீட்டர் உயரத்திற்கு எழும்பின.
இதனால் கடற்கரையை ஒட்டியுள்ள 100க்கும் மேற்பட்ட வீடு களுக்குள் புகுந்த ராட்சத அலைகள் வீடுகளில் இருந்த பொருட்களையும் இழுத்துச்சென்றன.
நேற்று காலையிலும் அலையின் வேகம் அதிகமாக இருந்தது. அத்துடன் வீடுகளுக்குள் தண்ணீர் புகுவது ெதாடர்ந்ததால் பொதுமக்கள் தங்களது வீட்டை விட்டு வெளியேறி அவர்களது உறவினர்களின் வீடுகளில் தஞ்ச மடைந்தனர்.
அக்கம்பக்க ெதருவீதிகளையும் தென்னந்தோப்புகளையும் கடல் நீர் சூழ்ந்த நிலையில் வருவாய், மீன்வளத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்தைப் பார்வையிட வந்தனர்.
"எங்களுக்கு இப்பகுதியில் தூண்டில் வளைவு அமைக்கவேண்டும் என்று நாங்கள் ஏற்கெனவே பலமுறை கூறியுள்ளோம். ஆனால் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தூண்டில் வளைவை அமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்காவிடில் எங்களது கிராமமே அழிந்து
விடும்," என்று அதிகாரிகளிடம் பொதுமக்கள் கூறினர்.
இதுதொடர்பாக அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர்.
ராஜாக்கமங்கலம் துறை, குளச்சல், மார்த்தாண்டம் துறை, வள்ளவிளை, தூத்தூர், இரயுமன்துறை, பூத்துறை ஆகிய பகுதிகளிலும் கடல் சீற்றம் காணப்பட்டது.
கடல் சீற்றத்தின் காரணமாக கரைக்குத் திரும்பிய பெரும்பாலான மீனவர்கள் வள்ளங்கள், படகுகளைப் பாதுகாப்பான இடங்களில் நிறுத்தி இருந்தனர். கடல் சீற்றம் இன்னும் சில நாட்கள் வரை நீடிக்கும் என்று மீன்வளத்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். இதனால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாமெனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரை உள்ள அனைத்து மீனவ கிராமங்களுக்கும் கடல் சீற்ற அபாய எச்சரிக்கை அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

