கும்பகோணத்தில் எலிக்கறி விற்பனை அமோகம்

கும்பகோணம்: ஆட்டு இறைச்சி, கோழிக் கறி, மான்கறி, பன்றி இறைச்சி, உடும்புக் கறி என சிலர் விரும்பி உண்பது உண்டு. இந்தப் பட்டியலில் இப்போது எலிக்கறி விற்பனையும் சேர்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

கீரைக்கட்டுகளைப் போல் எலிகளை ஆறு  ஆறு எலிகளாகக் கட்டி ஒரு கட்டு 200 ரூபாய்க்கு விற்று வருகிறார்கள். 

தற்போது கும்பகோணம் பகுதியைச் சுற்றியுள்ள நீலத்தநல்லூர், ஆவூர் உள்ளிட்ட கிராமப்பகுதியில் எலிக்கறி விற்பனை அமோகமாக நடந்து வருவதாகவும்  பொதுமக்கள் அதை ஆர்வத்துடன் வாங்கிச் செல்வதாகவும் தெரிகிறது. 

தஞ்சை மாவட்டத்தில் தற்போது போதிய மழை இல்லாத காரணத்தினால் அடுத்தகட்ட சம்பா சாகுபடி தொடங்கப்படாமல் வயல்வெளிகளை அப்படியே விட்டுள்ளனர். இதனால் விவசாயம் செய்யப்படாமல் உள்ள வயல்களில் எலிகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளது.

இதனையடுத்து எலிகளைப் பிடித்து சாலையோரங்களில் விற்பனை செய்து வருகின்றனர். இதில் ஒருவித மருத்துவகுணம் இருப்பதாகவும் வயல் எலிக்கறி கிடைப்பது அரிது என்று கூறியும்  பலரும் தேடி வந்து எலிகளை வாங்கிச் செல்வதாக விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.