சிவனுக்கு அப்துல் கலாம் விருது

சென்னை: இஸ்ரோ தலைவர் சிவனுக்கு அப்துல் கலாம் விருதை முதல்வர்  எடப்பாடி பழனிசாமி வழங்கினார். 

தமிழக அரசால் அறிவியல் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்குபவர்களுக்கு கடந்த மூன்று ஆண்டுகளாக அப்துல் கலாம் விருது வழங்கப்பட்டு வருகிறது. 

இவ்வாண்டிற்கான இந்த விருது இஸ்ரோ தலைவர் சிவனுக்கு வழங்கப்பட இருந்தது. 

ஆனால் அண்மையில் நடந்த சுதந்திர தின நிகழ்ச்சியில் சிவனால் கலந்துகொள்ள முடியவில்லை.  

இந்நிலையில் இஸ்ரோ தலைவர் சிவன் நேற்று தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து விருதைப் பெற்றுக்கொண்டார். 

முன்னதாக அறிவியல் தொழில் நுட்பத்தில் ஏராளமான விருதுகளை வாங்கிக் குவித்துள்ள சிவன், 1999ஆம் ஆண்டில் விக்ரம் சாராபாய் விருது, 2007ஆம் ஆண்டில் இஸ்ரோ விருது, 2012 ஆம் ஆண்டில் டாக்டர் பிரயன் ராய் விருது ஆகிய விருதுகளைப் பெற்றுள்ளதாக ஊடகத் தகவல்கள் குறிப்பிட்டுள்ளன. 

முன்னதாக சென்னை விமான  நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ஆண் பெண் வேறுபாடின்றி இஸ்ரோவில் திறமையானவர்களுக்கு  முன்னுரிமை அளிக்கப்படும் என்று தெரிவித்தார்.

நாட்டின் 71வது சுதந்திர தின விழா கடந்த 15ஆம் தேதி கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. 

இந்த விழாவைத் தொடர்ந்து சுதந்திர தின உரையாற்றி சிறப்பாக சேவை புரிந்தவர்களுக்கு விருதுகளை முதல்வர் வழங்கினார்.

இதில் டாக்டர் அப்துல் கலாம் விருது போரூர் ராமச்சந்திரா பல்கலைக்கழக பேராசிரியர் டாக்டர் தியாகராஜனுக்கு வழங்கப்பட்டது.

துணிவு மற்றும் சாகச செயலுக்கான கல்பனா சாவ்லா விருது திருவண்ணாமலையைச் சேர்ந்த பிரித்தீக்கு வழங்கப்பட்டது.

முதல்வரின் நல் ஆளுமை விருது தமிழ்நாடு போலிஸ் வீட்டு வசதி வாரியம், வேளாண்மை துறை, வணிக வரித்துறை ஆகிய பிரிவுகளுக்கு வழங்கப்பட்டது.
 

Loading...
Load next