வாடிக்கையாளர்களின் நகைகளைத் திருடிய வங்கி அதிகாரிகள்

திருவண்ணாமலை:  திருவண்ணாமலை கரூர் வைசியா வங்கிக் கிளையில் பணியாற்றிய மேலாளர்கள், ஊழியர்கள், நகை மதிப்பீட்டாளர் ஆகிய ஏழு பேர் கூண்டோடு கைதாகி சிறையில் அடைக்கப்பட்டனர். 

வாடிக்கையாளர்கள் அடகு வைத்த ஒன்றரை கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகளைத் திருடி விற்றதாக அவர்கள் மீது புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

திருவண்ணாமலை  மாவட்டம் அண்ணாமலையார் கோயில் எதிரில் உள்ள சன்னதி தெருவில் இயங்கி வரும் கரூர் வைசியா வங்கியில்தான் இந்தக் கைவரிசை இடம்பெற்றுள்ளது. நகைக் கடன், விவசாயக் கடன் உட்பட பல்வேறு கடன்களை வழங்கும் இந்த வங்கியில் மாதத்திற்கு இரு முறை வாடிக்கையாளர்களின் தங்க நகைகளைச் சரிபார்ப்பது வழக்கம்.

கடந்த மே மாதம் இறுதியில் தங்க நகைகளைச் சரிபார்த்தபோது வாடிக்கையாளர்கள் அடகு வைத்திருந்த  சுமார் ஒன்றரை கோடி ரூபாய் மதிப்புள்ள 3 கிலோ 700 கிராம் தங்க நகைகள் இருந்த 40 பொட்டலங்களைக் காணவில்லை. 

இது பற்றி ஜூன் மாதம் 4ம் தேதி காவல்துறையினரிடம் புகார்  தெரிவிக்கப்பட்டது. வங்கி  ஊழியர்கள் ஏழு பேரை போலிஸ் கைதுசெய்தது. அவர்களில் மூவர் பெண் ஊழியர்கள். அனைவரும் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் முன்னிலையாயினர். 

ஏழு பேரும் நீதிமன்ற உத்தரவின் பேரில்  வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக ஊடகத் தகவல்கள் தெரிவித்தன. 

வங்கி அதிகாரிகளே இத்தகைய காரியத்தில் ஈடுபட்டு இருப்பது குறித்து வங்கி அதிகாரிகளும் வாடிக்கை யாளர்களும்  அதிர்ச்சி அடைந்து இருப்ப தாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Loading...
Load next