‘சிதம்பரம் மீதான குற்றச் சாட்டிற்கு ஆதாரம் உள்ளது’

சென்னை:  கள்ளப்பணத்தை நல்ல பணமாக மாற்றும் சட்டவிரோத காரியத்தில்  முன்னாள் மத்திய அமைச்சரான ப சிதம்பரம் ஈடுபட்டு இருக்கிறார்  என்பதற்கு பத்திர சாட்சியங்கள் இருப்பதாக நேற்று உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத் துறை அதிகாரிகள் வாதிட்டனர்.

தான் கைது செய்யப்படுவதற்குத் தடை விதிக்க வேண்டும் என்றும் தான் செய்துள்ள மேல்முறையீட்டை உடனடியாக விசாரிக்கவேண்டும் என்றும் சிதம்பரம் உச்ச நீதிமன்றத்தில் மனு செய்திருந்தார். 

அந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத் துறை அதிகாரிகள் சிதம்பரத்தின் கோரிக்கையை எதிர்த்தனர்.

முன்னாள் அமைச்சரின் மேல்முறையீட்டை திங்கட்கிழமை விசாரிக்கப்போவதாக உச்ச நீதிமன்றம் அறிவித்து இருக்கிறது. ஊழல் விசாரணைகளையொட்டி தன்னை சிபிஐ கைது செய்ததை ஆட்சேபித்து சிதம்பரம் தாக்கல் செய்துள்ள மனுவையும் உச்ச நீதிமன்றம் திங்கட்கிழமை விசாரிக்கும்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சிதம்பரத்தை சிபிஐ ஐந்து நாள் தன் பொறுப்பில் எடுத்து விசாரித்து வருகிறது. இந்த விசாரணை திங்கட்கிழமை முடிவடைகிறது.

சிதம்பரம் முன் பிணை கேட்டு செய்திருந்த வேண்டுகோளை டெல்லி உயர்நீதிமன்றம் நிராகரித்ததை அடுத்து சிதம்பரத்தை சிபிஐ கைதுசெய்தது. 

ஒரு சிறப்பு நீதிமன்றம் அவரை ஐந்து நாட்கள் விசாரிக்கலாம் என்று சிபிஐக்கு அனுமதி வழங்கியது. திரு சிதம்பரம் புதன்கிழமை உச்ச நீதிமன்றத்தை நாடினார். தன்னுடைய மேல்முறையீட்டு மனுவை உடனடியாக விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். 

ஆனால் உச்ச நீதிமன்றம் அவசரமாக விசாரிக்க மறுத்துவிட்டது. 

ஐஎன்எக்ஸ் என்ற நிறுவனம் வெளிநாட்டு முதலீடுகளை சட்ட விரோதமாகப் பெறுவதற்கு சிதம்பரம் நிதி அமைச்சராக இருந்தபோது உதவி இருக்கிறார் என்றும் இதில் சிதம்பரத்தின் புதல்வரான கார்த்தி சிதம்பரத்துக்குத் தொடர்பு இருக்கிறது என்றும் குற்றம் சுமத்தப்பட்டு இருக்கிறது. 

ஆனால் எல்லா குற்றச்சாட்டுகளையும் சிதம்பரம் மறுத்து வருகிறார். இந்நிலையில், சிதம்பரம் கைது செய்யப்பட்டதை எதிர்க்கட்சிகள் குறைகூறி வருகின்றன.

சிதம்பரத்தைக் கைது செய்ய சிபிஐ அதிகாரிகள் சுவர் ஏறி குதித்த விவகாரம் இந்தியாவுக்கே அவமானம் என்று திமுக தலைவர் ஸ்டாலின் குறிப்பிட்டார். 

சிதம்பரத்தை அரசியல் ரீதியில் பழிவாங்குகிறார்கள் என்றும் அவர் கூறினார். 

சிதம்பரம் கைதானதை ஆட்சேபித்து வியாழக்கிழமை தமிழ்நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Loading...
Load next