அதிமுகவில் திமுக அணி; போட்டிக்கு எம்ஜிஆர் அணி

அதிமுகவில் திமுக அணி; போட்டிக்கு எம்ஜிஆர் அணி

2 mins read

சென்னை: தமிழ்நாட்டின் ஆளும் கட்சியான அதிமுகவில் எதிர்க்கட்சியான திமுகவை ஆதரிக்கும் அணி ஒன்று உருவாகிவிட்டதாகவும் அதை எதிர்த்து அதிமுக மாநில நிர்வாகிகள் சிலர் எம்ஜிஆர் அணியை உருவாக்க முயன்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

அதிமுகவின் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், மாவட்டச் செயலாளர்களில் சிலர், பல காரணங்களால் திமுகவுடன் ரகசிய தொடர்பு வைத்து இருப்பதாகவும் அவர்கள் திமுக பிரமுகர்களுடன் புரிந்துணர்வோடு செயல்பட்டு வருவதாகவும் அதிமுகவினர் சிலர் கூறுகிறார்கள்.

அதிமுகவில் உள்ள திமுக ஆதரவாளர்கள், ஆளும் கட்சியிலேயே திமுக அணியை உருவாக்கிவிட்டார்கள் என்றும் அந்த அணியைத் துடைத்தொழிக்க அதிமுக தலைமைப்பீடம் உடனடியாக முயலவேண்டும் என்றும் ஆளும் கட்சி வட்டாரங்கள் பரபரப்பாக தெரிவிக்கின்றன.

இல்லை என்றால் வரும் ஜனவரியில் அதிமுகவில் எம்ஜிஆர் அணி ஒன்றை உருவாக்க மாநில நிர்வாகிகள் சிலர் திட்டமிட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

அண்மையில் நடந்து முடிந்த வேலூர் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக வேட்பாளர் வெற்றிபெற அதிமுகவினர் உதவி இருப்பதாகவும் அதிமுகவினர் கூறுகிறார்கள்.

இதனிடையே, அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மருத்துவர் ராமதாஸின் பாமக, உள்ளாட்சித் தேர்தலில் தனித்து நிற்க திட்டமிடுவதாகக் கூறப்படுகிறது.

தமிழ்நாட்டின் வடபகுதிகளில் மட்டும் 40 விழுக்காட்டு இடத்தைப் பெறவேண்டும். இல்லை என்றால் அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறிவிட வேண்டும் என்று பாமக யோசித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவ்வேளையில், தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய சட்டமன்றத் தொகுதிகளுக்கு எந்த நேரத்திலும் இடைத்தேர்தல் நடத்த தயார் என்று தேர்தல் ஆணையம் அறிவித்து இருக்கிறது.

இதை உணர்ந்து திமுக, அதிமுக இரண்டு கட்சிகளும் அந்தத் தொகுதிகளில் தேர்தல் ஆயத்தப் பணிகளைத் தொடங்கிவிட்டன.