சென்னை: தமிழகத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவி இருப்பதாக உளவுத்துறை தகவல்கள் வந்ததை அடுத்து நடப்புக்கு வந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடரும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழ்நாட்டின் பல முக்கிய நகர்
களின் கோயில்கள், தேவாலயங்கள், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், கடைத்தொகுதிகள், கடற்கரைகள் எங்கும் பலத்த போலிஸ் காவல் போடப்பட்டு இருக்கிறது. ஆலயங்களிலும் ரயில் நிலையங்களிலும் விமான நிலையங்களிலும் பேருந்து நிலையங்களிலும் முழுமையான சோதனைக்குப் பிறகே ஒவ்வொருவரும் அனுமதிக்கப்படுகிறார்கள்.
இந்நிலையில், கோவையில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட மூன்று பேரை நேற்று போலிசார் விடுவித்தனர்.
சித்திக், ஜாகிர், சாதிக் என்ற மூவரைச் சந்தேகத்தின் பேரில் போலிஸ் கைது செய்திருந்தது. கேரளாவைச் சேர்ந்த ஒருவருடன் அவர்களுக்குத் தொடர்பு இருப்பதாக போலிசார் சந்தேகப்பட்டனர்.
இந்த நிலையில், அப்துல் காதர் என்ற அந்த கேரள நபர், போலிசிடம் சரணடைந்துவிட்டதாகத் தெரியவந்ததை அடுத்து அந்த மூவரையும் நேற்று போலிஸ் நிபந்தனையின் பேரில் விடுவித்தது.
லக்ஷர் இ தொய்பா இயக்கத்தைச் சேர்ந்த ஆறு பயங்கரவாதிகள் சதித்திட்டத்தை அரங்கேற்றும் நோக்கத்தில் தமிழகத்தில் ஊடுருவி இருப்பதாக மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்ததை அடுத்து தமிழகம் முழுவதும் விழிப்பு நிலையில் வைக்கப்பட்டு உள்ளது.

