மதுரை: மதுரை புதூரில் உள்ள ராமவர்மா நகர், மண்மலைமேடு, காந்திபுரம், ஜவகர்புரம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த குண்டர்கும்பல் பேர்வழிகள், கார்த்தி மற்றும் ஸ்ரீதர் என்ற இரண்டு போக்கிரிகளைத் தலைவர்களாகக் கொண்டு முன் அறிவிப்பு செய்துவிட்டு போட்டாபோட்டி போட்டுக்கொண்டு கொலை செய்து வருவதாகவும் இதனால் மக்கள் பயத்தில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமூக வலைத்தளங்களில் பதிவிட்டும் புதூர் பகுதிகளில் சுவரொட்டிகள் ஒட்டியும் முன்னதாகவே கொலைக்கான எச்சரிக்கை விடுத்து, இக்கும்பல் கடந்த மூன்று ஆண்டுகளில் இதுவரை எட்டு பேரைத் தீர்த்துக் கட்டி இருக்கிறதுஎன்று தெரிவிக்கப்படுகிறது.
'ஸ்ரீபாய்ஸ்', 'நந்தாபாய்ஸ்', 'காட்டுராஜா பாய்ஸ்' என அடைமொழிகளுடனான சுவராட்டிகள் மதுரை முழுவதும் பல இடங்களில் ஒட்டப்பட்டுள்ளன.
சமூக வலைத்தளங்களிலும் 'இனி பேச்சு இல்லை, தீர்ப்பு மட்டும்தான்' என்றும் 'உரக்கச் சொல்வோம் உலகுக்கு-ஈடு செய்வோம் உங்கள் இறப்புக்கு' போன்ற வாசகங்களுடன் பழிக்குப்பழி வாங்கும் உணர்வை இந்தச் சுவரொட்டிகள் மூலம் முன்னதாகவே வெளிப்படுத்தி அவர்கள் கொலைபாதகங்களைச் செய்துவருவதாகக் கூறப்படுகிறது.
இந்தக் கொலைகளுக்கு எல்லாம் கோழிச் சண்டை மூலம் ஏற்பட்ட பகையே காரணம் என்று போலிஸ் தெரிவித்துள்ளது.
மதுரை புதூர் ராமவர்மா நக ரைச் சேர்ந்த லேவாதேவியாளரான ராஜா, 35, என்பவர் ஆகஸ்ட் 21ஆம் தேதி நள்ளிரவில் கொலையுண்ட சம்பவம் சமூக ஊடகங்களில் பெரும் பரபரப்பைக் கிளப்பியது.

