திருப்போரூர்: காஞ்சிபுரம் மாவட்டத்தின் திருப்போரூரை அடுத்த மானாம்பதி கிராமத்தில் சுமார் நூறாண்டுகள் பழமையான கங்கையம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் குளம் கடந்த 15 நாட்களுக்கு முன்பு தூர் வாரப்பட்டுள்ளது. கோவிலைப் புதுப்பிக்கும் பணிகளும் நடந்துள்ளன.
மானாம்பதி பாடசாலை தெருவில் வசித்து வந்த திலீபனுக்கு நேற்று முன்தினம் பிறந்த நாள். இதற்காக ஞாயிற்றுக்கிழமை மதியம் நண்பர்களுடன் கோவிலின் பின்புறத்தில் உள்ள கோவில் குளம் அருகில் திலீபன் கேக் வெட்டி பிறந்தநாளைக் கொண்டாடினார். இதில் அவரது நண்பர்களான சூர்யா, யுவராஜ், திருமால், விஸ்வநாதன், ஜெயராமன் ஆகிய 5 பேரும் பங்கேற்றுள்ளனர். கேக் வெட்டிய பிறகு திலீபன் உள்பட அனைவரும் அங்கேயே அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தனர்.
மாலை 3.30 மணி அளவில் திடீரென அவர்கள் அமர்ந்திருந்த இடத்தின் அருகே பெரும் சத்தத்துடன் குண்டு வெடித்தது. கோவிலின் அருகில் வசித்து வரும் லட்சுமி என்ற பெண் சத்தம் கேட்டு உடனே வெளியில் ஓடி வந்தார். அப்போது அங்கிருந்த ஐந்து பேரும் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்தபடி கிடந்தனர். அவர் கூச்சல் போட்டு அக்கம் பக்கத்தினரை திரட்டினார். உடனடியாக மானாம்பதி கிராம மக்கள் அனைவரும் குண்டு வெடித்த பகுதிக்கு விரைந்து சென்றனர். உடனடியாக அனைவரையும் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். இருப்பினும் குண்டு வெடிப்பில் பலத்த காயம் அடைந்த சூர்யா, மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.
உடல் சிதறி காயம் அடைந்த திலீபன், யுவராஜ், திருமால், விஸ்வநாதன், ஜெயராமன் ஆகிய 5 பேரும் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று அதிகாலை 3 மணி அளவில் திலீபன் உயிரிழந்தார்.
காயம் அடைந்தவர்களில் ஜெயராமனின் உடல்நிலை மிகவும் மோசமாக இருந்ததால் அவர் மட்டும் சென்னையில் உள்ள ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். யுவராஜ், திருமால், விஸ்வநாதன் ஆகியோருக்கு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் 6 பயங்கரவாதிகள் ஊடுருவி இருப்பதாக கடந்த ஒரு வாரமாக செய்தி பரவி வருகிறது.
கோவையில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக வெளியான தகவலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. குண்டு வெடிப்பு நடைபெற்ற மானாம்பதி கங்கையம்மன் கோவிலில் காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பு அதிகாரி கண்ணன் நேரில் சென்று விசாரணை நடத்தினார். இந்த சம்பவம் தொடர்பாக மானாம்பதி காவல்நிலைய அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். குண்டு வெடித்தது எப்படி என்பது பற்றி இன்னும் முழுமையான தகவல்கள் எதுவும் காவல்துறைக்கு கிடைக்கவில்லை. குண்டு வெடித்தது பற்றி மானாம்பதி கிராமத்தில் காவல்துறையினர் விசாரித்தனர். அப்போது யாருக்கும் எந்த தகவலும் தெரியவில்லை.
குண்டுவெடிப்பில் 2 பேர் பலியாகிவிட்ட நிலையில் 4 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதற்கிடையே மானாம்பதி கிராமத்தில் காவல்துறையினர் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

