தமிழ்நாட்டில் எதிர்வரும் நவம்பர், டிசம்பர் மாதங்களில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்க மாநில தேர்தல் ஆணையம் ஆலோசித்து வருகிறது.
தமிழ்நாட்டில் மொத்தம் 15 மாநகராட்சி, 123 நகராட்சி, 529 பேரூராட்சிகள் இருக்கின்றன. அதுபோல கிராமப் பகுதிகளில் 12,524 ஊராட்சிகளும், 385 ஊராட்சி ஒன்றிய அமைப்புகளும் உள்ளன.
உள்ளாட்சி அமைப்புகளில் இருந்தவர்களின் பதவிக்காலம் 2016ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 24ஆம் தேதி முடிவடைந்தது. அதே ஆண்டில் தேர்தலை நடத்த அப்போதைய முதல்வர் ஜெயலலிதா முடிவு செய்தார்.
உள்ளாட்சி அமைப்புகளில் பட்டியல் பிரிவினருக்கு உரிய இட ஒதுக்கீடு செய்யவில்லை என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக வழக்கு தொடர்ந்ததை அடுத்து தேர்தல் ரத்தானது.
இதன் தொடர்பில் உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பாக, தமிழ்நாட்டில் உடனடியாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. அக்டோபர் மாதத்துக்குள் தேர்தல் அறிவிப்பு வெளியிடப்படும் என்று உச்ச நீதிமன்றத்தில் தமிழக தேர்தல் ஆணையம் உத்தரவாதம் அளித்துள்ளது.
அக்டோபர் மாத இறுதியில் உள்ளாட்சித் தேர்தல் அட்டவணை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலை இரண்டு அல்லது மூன்று கட்டங்களாக நவம்பர், டிசம்பர் மாதங்களில் நடத்த ஆலோசனை செய்யப்படுகிறது.
மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி ஆகிய 3 அமைப்புகளுக்கும் மின்னணு எந்திரம் மூலம் ஓட்டுப் பதிவு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. சுமார் 50,000 மின்னணு எந்திரங்கள் பக்கத்து மாநிலங்களில் இருந்து பெறப்படும்.
கிராமப் பகுதிகளில் உள்ள ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியங்களுக்கு வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 92,771 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன.
இதற்கிடையே, தமிழக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாததால் அந்த அமைப்புகளுக்கான நிதி ஒதுக்கீடுகள், திட்டங்களை மத்திய அரசு நிறுத்தியுள்ளது. இதனால் உள்ளாட்சி நிர்வாகப் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. தேர்தல் முடிந்த பிறகு மத்திய அரசிடம் இருந்து உள்ளாட்சி அமைப்புகளுக்கு சுமார் ரூ.5,000 கோடி நிதியைப் பெற முடியும். இந்த நிதியை ஒதுக்கக் கோரி நேற்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை தமிழக அமைச்சர் வேலுமணி சந்தித்தார்.

