மருத்துவர்கள் வேலை நிறுத்தம்

மருத்துவர்கள் வேலை நிறுத்தம்

2 mins read
1895f04d-86d5-485d-9d53-c4b87cdeabe8
சென்னை அரசு மருத்துவமனையில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட ஆறு மருத்துவர்களின் உடல் நிலை மோசமடைந்ததால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த நிலையில் மருத்துவர்களின் ஊதிய உயர்வு குறித்து அரசு ஆலோசனை நடத்தி வருவதாக அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார். படம்: இந்திய ஊடகம் -

சென்னை: சென்னை அரசு மருத்துவமனையில் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்த ஆறு மருத்துவர்களின் உடல்நிலை மோசமாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் நேற்று தமிழகம் முழுவதும் அரசு மருத்துவர்கள் ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் முதுநிலை மாணவர்கள் மற்றும் தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, சேலம், நாமக்கல் உள்ளிட்ட பல மாவட்டங்களில் அரசு மருத்து வமனை, மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். தஞ்சையில் சிகிச்சை மற்றும் நோயாளிகளைக் கவனிக்காமல் மருத்துவர்கள் தங்களது வேலைகளை புறக்கணித்து போராட்டத்தில் பங்கேற்றனர்.

இதனால் தஞ்சை மாவட்டம் மட்டுமல்லாமல் திருவாரூர், நாகை, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் சிகிச்சைக்கு வந்த 5000க்கும் மேற்பட்ட நோயாளிகள் பாதிக்கப்பட்டனர். நேற்று 7.30 மணிக்குத் தொடங்கிய மருத்துவர்களின் வேலை நிறுத்தம் இன்று காலை 7.30 மணிக்கு முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள மருத்துவர்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும், அரசு மருத்துவர்களுக்கு காலம் சார்ந்த ஊதிய உயர்வை வழங்க வேண்டும், கலந்தாய்வு இன்றி நேரடி பணி நியமனம் செய்வதை நிறுத்த வேண்டும், தகுதிக்கு ஏற்ற ஊதியம் வழங்க வேண்டும், மற்ற மாநிலங்களுக்கு நிகராக ஊதியம் வழங்க வேண்டும் என்பன உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பல ஆண்டுகளாக அரசு மருத்துவர்கள் போராடி வந்துள்ளனர். ஆனால் மருத்துவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாததால் காலவரையற்ற உண்ணாவிரதம், மனித சங்கிலி, ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட பல்வேறு கட்ட போராட்டங்களில் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

அடுத்த கட்டமாக 24 மணி நேர வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெறும் என்று அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சங்கம் அறிவித்தது. அதன்படி நேற்று வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்றது.

இதற்கிடையே இம்மாதம் 23ஆம் தேதியிலிருந்து சென்னை அரசு மருத்துவமனையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட பெருமாள் பிச்சை, நளினி, நாச்சியப்பன், அனிதா, அகிலன், ரமா ஆகியோரின் உடல் நிலை பாதிக்கப்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயணபாபு அவர்களை நேரில் சந்தித்து உண்ணாவிரதத்தைக் கைவிடும்படி கேட்டுக்கொண்டார். ஆனால் கோரிக்கைகள் நிறைவேறும் வரை உண்ணாவிரதம் தொடரும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.