சென்னை: மலேசிய தலைநகர் கோலாலம்பூரிலிருந்து திங்கட்கிழமை காலை 'ஏர் ஏஷியா' விமானம் மூலம் சென்னை வந்த மலேசிய குடியுரிமை பெற்ற 41 வயது பெண் மீது அதிகாரிகளுக்குச் சந்தேகம் ஏற்பட்டது.
அவரை அதிகாரிகள் சோதனையிட்டபோது கைப்பைக்குள் மறைத்துவைக்கப்பட்டிருந்த 2.52 கோடி ரூபாய் மதிப்பிலான 6.5 கிலோ தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
உடனே அவரை கைது செய்த அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதே நாள் காலை அனைத்துலக விமான முனையத்தின், பயணியர் வருகை பகுதியில் சுங்கத் துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்குள்ள கழிப்பறையின் தண்ணீர் தொட்டியில் சிறிய பொட்டலம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதை பிரித்துப் பார்த்தபோது, 7.8 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 200 கிராம் தங்கக் கட்டிகள் இருந்தன.
அதனையும் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். இதனுடன் சேர்த்து சுமார் மூன்று கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

