சென்னை: தொழில் அதிபர்களைச் சந்தித்து தமிழகத்துக்கு அதிக முதலீடுகளை ஈர்க்கவே தாம் வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்வதாக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தமது வெளிநாட்டு பயணத்தை வேண்டும் என்றே கொச்சைப்படுத்துவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள முதல்வர் பழனிசாமி, நேற்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது, தாம் ஒன்றும் பெரிய தொழிலதிபர் அல்ல என்று அவர் குறிப்பிட்டார்.
"நான் சாதாரண விவசாயி தான். நான் நேரில் சென்று அழைப்பு விடுத்தால் தொழில் அதிபர்கள் தொழில் தொடங்க முன் வருவார்கள்.
"மு.க.ஸ்டாலின் மட்டும் ஏன் அடிக்கடி வெளிநாடு செல்கிறார். அதற்கான காரணத்தை இதுவரை அவர் தெரிவித்தது இல்லை," என்றார் முதல்வர் பழனிசாமி.
இந்நிலையில் முதல்வரின் வெளிநாட்டுப் பயணத்துக்கான உண்மையான காரணத்தை தெரிவிக்க வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், பொறுப்புள்ள எதிர்க்கட்சியின் கேள்விக்கு முறையாக பதில் சொல்லாமல், முதல்வர் உள்நோக்கம் கற்பிக்கக் கூடாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
"நான் வெளிப்படையாக மேற்கொள்ளும் வெளிநாடு பயணத்திற்கு உள்நோக்கம் கற்பிக்கும் முதல்வர், தனது பயணம் பற்றி விளக்க வேண்டும்," என ஸ்டாலின் மேலும் வலியுறுத்தி உள்ளார்.
இதற்கிடையே, நாடாளுமன்றத் தேர்தலில் படுதோல்வி அடைந்ததையடுத்து அதிமுகவை வலுப்படுத்தும் விதமாக சசிகலாவுடன் இணைந்து செயல்பட முதல்வர் பழனிசாமி தரப்பு தீர்மானித்திருப்பதாக தமிழக ஊடகம் தெரிவித்துள்ளது.
டிடிவி தினகரனை கட்சியில் இருந்து ஒதுக்கிவைக்க சசிகலா சம்மதம் தெரிவித்துள்ளதாகவும், முதல்வரின் வெளிநாட்டுப் பயணம் முடிவுக்கு வந்த பின்னர் இருதரப்பும் இணைந்து செயல்படுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படும் எனவும் தமிழக ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. இதனால் அதிமுக வட்டா ரங்களில் பரபரப்பு நிலவுகிறது.

