13 மாவட்டங்களில் சவடு மண் எடுக்கத் தடை

13 மாவட்டங்களில் சவடு மண் எடுக்கத் தடை

2 mins read

மதுரை: ராமநாதபுரம் மாவட்டம் இலந்தைகுட்டத்தை சேர்ந்த நாகேந்திரன் என்பவர் மதுரை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனுவில் கூறியிருந்ததாவது:-

ராமநாதபுரம் மாவட்டம் சித்தார்கோட்டை கிராமத்தை சுற்றி ஜமீன்தார் வலசை, தமிழர்வாடி சமத்துவபுரம், சித்தார்கோட்டை, குலசேகரன்கால் உள்ளிட்ட பல்வேறு கிராமங்கள் உள்ளன. இந்தக் கிராமங்கள் கிழக்குக் கடற்கரை பகுதியில் இருந்து 800 முதல் ஆயிரம் மீட்டர் தொலைவில் அமைந்துள்ளன. இந்தப் பகுதியில் வசிக்கும் மக்கள் பொருளியல் ரீதியாகப் பின்தங்கியவர்கள். விவசாயத்தை மட்டுமே வாழ்வாதாரமாக கொண்டவர்கள்.

சட்ட விரோதமாக இந்தக் கிராமங்களில் மணல் எடுத்து விற்பனை செய்து வருகின்றனர். இது கனிம வள விதிகளுக்கு எதிரானது. அனுமதி பெற்ற அளவை காட்டிலும் 15 அடி வரை கூடுதலாக ஆழம் தோண்டி மணல் எடுக்கின்றனர். இதனால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்பட்டு கடல் நீர் ஊருக்குள் புகுந்துவிடும் நிலை உள்ளது.

இதுதொடர்பாக நடவடிக்கை கோரி அதிகாரிகளிடம் தொடர்ந்து பலமுறை மனு அளித்தும் பலன் இல்லை. எனவே ராமநாதபுரம் மாவட்டம் இலந்தைகுட்டம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் மணல் அள்ள தடை விதிக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இதேபோல, கிராமங்களில் சவடு மண் அல்லது களிமண் எடுப்பதற்காக வழங்கப்பட்டுள்ள அனுமதியைப் பயன்படுத்தி சில குவாரி உரிமையாளர்கள், சவடு மண்ணுக்குக் கீழ் உள்ள ஆற்று மணலை சட்ட விரோதமாக எடுத்து விற்பனை செய்து வருகின்றனர். 24 மணிநேரமும், நூற்றுக்கணக்கான லாரிகளில் சட்டவிரோதமாக ஆற்று மணல் எடுக்கப்படுகிறது. இதனால் ஆற்றின் இயற்கையான போக்கு, பாதை மாறுகிறது. அதோடு கடல்நீர் ஊருக்குள் புகுந்து அழிவை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. எனவே கடலாடி தாலுகாவுக்கு உட்பட்ட கிராமங்களில் சவடு மண் எடுக்க அனுமதி பெற்றுவிட்டு, சட்டவிரோதமாக மணல் எடுப்பதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என மற்றொரு வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.

இந்த வழக்குகள் நீதிபதிகள் சத்தியநாராயணன், புகழேந்தி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பு வழக்கறிஞர் முன்னிலையாகி, இது தொடர்பாக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்று தெரிவித்தார். இதையடுத்து நீதிபதிகள், "சவடு மண், மணல் எடுப்பது தொடர்பாகப் பல்வேறு வழிகாட்டுதல்களை நீதிமன்றங்கள் வழங்கியுள்ளன.

ஆனாலும் அவை முறையாகப் பின்பற்றப்படுவதில்லை. எனவே மதுரை உயர் நீதிமன்றத்திற்கு உட்பட்ட 13 மாவட்டங்களிலும் சவடு மண் அள்ள அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அனுமதி வழங்க இடைக்கால தடை விதிக்கப்படுகிறது.

ஏற்கெனவே சவடு மண் எடுக்க அனுமதி வழங்கி இருந்தால், அந்த உத்தரவுகள் ரத்துச் செய்யப்படுகின்றன.

இவ்வாறு நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியுள்ளனர். இந்த வழக்கை அக்டோபர் மாதம் 3 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

இந்த உத்தரவை தொடர்ந்து மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தேனி, திண்டுக்கல், கரூர், திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை ஆகிய 13 மாவட்டங்களில் சவடு மண் எடுக்க உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.