சென்னை: சுற்றுச் சூழல் ஆர்வலர் பியூஷ்மானுஷ் பொருளியல் தேக்கம் குறித்து சேலம் பாஜக அலுவலகத்திற்குச் சென்று அக்கட்சியின் நிர்வாகிகளை நோக்கிக் கேள்வியெழுப்பியதற்காக அவரைக் கண்மூடித்தனமாகத் தாக்கியுள்ள செயல் கண்டனத்திற்கு உரியது என்று சீமான் தெரிவித்துள்ளார். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். கருத்தைக் கருத்தால்தான் எதிர்கொள்ள வேண்டும். தாக்குவதும் மிரட்டுவதுமான வன்முறைச்செயல்களில் ஈடுபடுவது ஒருபோதும் ஏற்புடையதல்ல. பியூஷ்மானுஷ் பா.ஜ.க. அலுவலகத்திற்குள் அத்துமீறி நுழையவும் இல்லை. சண்டை, சச்சரவில் ஈடுபடும் நோக்கத்தோடு செல்லவும் இல்லை என்பது அவரது ஃபேஸ்புக் நேரலை காணொளி மூலம் தெளிவாகத் தெரிகிறது. பியூஷ்மானுஷ் பா.ஜ.க. நிர்வாகிகளுடன் தர்க்கரீதியாக வாதம் மட்டுமே செய்கிறார். பாஜக நிர்வாகிகள் மிக மோசமாக ஒருமையில் பேசி மிரட்டியதால் அவ்விடத்தை விட்டு நகர்கிறார். அதன் பிறகே அவர் மீது பா.ஜ.க.வின் நிர்வாகிகள் கோரத்தாக்குதலை நடத்தி உள்ளனர். இத்தகைய வன்முறை வெறியாட்டத்தை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டியது ஓர் அரசின் தலையாயக் கடமையாகும். பியூஷ் மானுஷைத் தாக்கியவர்களைக் கைது செய்ய வேண்டும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதேபோல் மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லாவும் பாஜகவினரின் இந்த வன்முறையைக் கண்டித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பியூஷ் மானுஷ் மீது பா.ஜ.க.வினர் தாக்குதல் நடத்தி உள்ளது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. நாட்டின் பொருளியல் மந்தநிலைக் குறித்து அறிய சேலத்தில் உள்ள பாஜக அலுவலகத்துக்கு சென்ற சுற்றுச்சூழல் ஆர்வலர் பியூஷ்மானுசை காவல்துறையினர் முன்னிலையிலேயே தாக்குதல் நடத்தி இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. வடமாநிலங்களில் நடைபெற்றுவந்த இதுபோன்ற தாக்குதல் தற்போது தமிழகத்தில் நடைபெற்று வருவது வேதனை அளிக்கிறது. பியூஷ் மானுஷ் மீது தாக்குதல் நடத்தியவர்களை உடனடியாகக் கைது செய்ய வேண்டும். பியூஷ்மானுஷிற்கு மருத்துவச் சிகிச்சை அளித்து அவருக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.
கே.எஸ்.அழகிரி கண்டனம்
இந்தியாவில் நிலவுகிற பொருளாதார மந்தநிலை குறித்து விளக்கம் கேட்பதற்காக சேலத்தில் உள்ள பா.ஜ.க. அலுவலகத்துக்கு நேரில் சென்ற சமூக ஆர்வலர் பியூஸ் மானுஷை கடுமையாகத் தாக்கியதோடு, செருப்பு மாலை அணிவித்து பா.ஜனதாவினர் அராஜகத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன்மூலம் தமிழக பா.ஜனதாவினருக்கு சகிப்புத் தன்மை இல்லை என்பதை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். ஜனநாயகத்தில் வழங்கப்பட்டுள்ள உரிமையின் அடிப்படையில் செயல்பட்டவர் மீது இத்தகைய தாக்குதலை பா.ஜனதாவினர் கட்ட விழித்திருப்பதை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக வன்மையாக கண்டிப்பதாகக் கூறியுள்ளார்.

