'முதியவர்களாலேயே பாலியல் தொல்லை அதிகம்'

'முதியவர்களாலேயே பாலியல் தொல்லை அதிகம்'

1 mins read

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு ஆகிய அமைப்புகள் இணைந்து சட்டக் கல்லூரி மாணவிகளின் உதவியுடன் ஒரே நாளில் 14 மகளிர் பள்ளிகளில் 10,000க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு போக்சோ சட்டம் குறித்தும் பாலியல் தொல்லைகளில் இருந்து பாதுகாத்துக்கொள்வது பற்றியும் நிகழ்ச்சிகளின் மூலம் விளக்கப்பட்டது. முடிவில் மாணவிகளுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து அறிவதற்காக புகார் பெட்டி ஒன்று வைக்கப்பட்டது.

மாணவிகள் தங்களுக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்களை எழுதி ரகசிய புகார் பெட்டியில் போட்டனர். அதில், பல மாணவிகள் சிறு வயது முதல் தற்போது வரை பாலியல் ரீதியாக ஏற்பட்ட பாதிப்புகள் பற்றி கூறியிருந்தனர். மேலும் உறவினர்கள், அக்கம்பக்கத்தினர் மூலமாக மட்டுமல்லாது, முதியவர்கள் மூலமாகத்தான் பாலியல் தொல்லைகளுக்கு ஆளானதாகத் தெரிவித்து இருந்தனர். இதுகுறித்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் துரைமுருகன் கூறுகையில், "தொல்லை கொடுத்தவர்கள் ரகசியமாக கண்காணிக்கப்பட்டு இனி இதுபோன்று செயல்படாமல் தடுக்கப்படுவதுடன், அவர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டு எச்சரிக்கப்படும். மேலும் இதுபோன்ற செயலில் ஈடுபட்டால் அவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.