சென்னை: அண்மையில் திமுகவில் இணைந்த தங்கதமிழ்ச்செல்வன் அக்கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர்களில் ஒருவராக நியமிக்கப்பட்டு உள்ளார். டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் கொள்கை பரப்புச் செயலாளராகவும் அக்கட்சியின் இரண்டாம் நிலைத் தலைவர்களில் ஒருவருமாக தங்க தமிழ்ச்செல்வன் இருந்து வந்தார்.
மக்களவைத் தேர்தலுக்குப் பின்னர் தினகரனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அக்கட்சியிலிருந்து விலகி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.
பதவியை எதிர்பார்த்து திமுகவில் இணையவில்லை என்று அப்போது அவர் கூறியிருந்தார். இந்நிலையில், திமுக கொள்கை பரப்புச் செயலாளர்களில் ஒருவராக தங்க தமிழ்ச்செல்வன் நியமிக்கப்படுவதாக நேற்று திமுக தலைமை அறிவித்தது.
திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் பெயரில் வெளியான அறிவிப்பில், கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர்களாக ஏற்கெனவே உள்ள திருச்சி சிவா, ஆ.ராசா ஆகியோருடன் இணைந்து தங்க தமிழ்ச்செல்வன் பணியாற்றுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அமமுகவில் இருந்து விலகி திமுகவில் சேர்ந்த வி.பி.கலைராஜனுக்கும் நேற்று பதவி வழங்கப்பட்டது. திமுக இலக்கிய அணிச் செயலாளராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

