மதுரை சுங்கச்சாவடியில் துப்பாக்கிச்சூடு: கும்பல் கைது

மதுரை சுங்கச்சாவடியில் துப்பாக்கிச்சூடு: கும்பல் கைது

1 mins read
Google News Preferred Icon

மதுரை: மதுரை கப்பலூர் சுங்கச் சாவடியில் காரில் வந்த ஒருவர் துப்பாக்கியால் சுட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருநெல்வேலியில் இருந்து ஐவர் கொண்ட குழுவினர் திருச்சிக்கு காரில் சென்றனர். மதுரை அருகே கப்பலூர் சுங்கச்சாவடி வந்தபோது அவர்களிடம் ஊழியர் சுங்கக்கட்டணம் கேட்டுள்ளார். ஆனால், காரில் வந்தவர்கள் கட்டணம் செலுத்த மறுப்பு தெரிவித்ததுடன் ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாக்குவாதம் முற்றிய நிலையில் அரியலூரைச் சேர்ந்த சசிகுமார் என்பவர் கையில் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து ஐந்து முறை சுட்டார்.

வானை நோக்கி அவர் சுட்டதால் ஊழியர்களுக்குக் காயம் ஏற்படவில்லை. துப்பாக்கிச் சத்தம் கேட்டு மற்ற வாகன ஓட்டிகள் அங்கு திரண்டதால் காரில் வந்த கும்பல் தப்பியோடியது. ஆனால் துப்பாக்கியால் சுட்ட சசிகுமார் சிக்கிக்கொண்டார். போலிசிடம் அவர் ஒப்படைக்கப்பட்டார். எஞ்சிய நால்வர் உசிலம்பட்டி அருகே கைது செய்யப்பட்டனர்.

இந்தக்கும்பல், குற்றவழக்கு ஒன்றில் திருநெல்வேலி நீதிமன்றத்தில் முன்னிலை ஆனபின் திரும்பி வரும் வழியில் இந்த சம்பவம் நிகழ்ந்ததும் அவர்கள் அனைவரும் சென்னை மற்றும் அரியலூரைச் சேர்ந்தவர்கள் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.