நெல்லை: எடப்பாடி பழனிசாமி தலைமையில் இருக்கும் அமைச்சரவையை, அதிமுக அமைச்சரவை என்று சொல்ல முடியாது. சுற்றுலா அமைச்சரவைதான் என்று சொல்லவேண்டிய நிலையில் இன்றைக்கு இந்த ஆட்சி நடந்துகொண்டிருக்கிறது என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.
திமுக தலைவரும் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், மாமன்னர் பூலித்தேவரின் 304வது பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு, நெல்லை மாவட்டம் நெற்கட்டு செவலில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு நேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து ஸ்டாலின் பேசும்போது, "முதல்வர் உள்ளிட்ட 10 அமைச்சர்கள் வெளிநாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர். மேலும் 8 அமைச்சர்கள் சுற்றுப்பயணம் செல்லப்போவதாகவும் செய்திகள் வந்துகொண்டிருக்கிறன.
"ஏற்கெனவே, இந்த ஆட்சியில் கடந்த 8 ஆண்டுகாலத்தில் இரண்டு உலக முதலீட்டாளர் மாநாடு நடந்திருக்கிறது. அந்த உலக முதலீட்டாளர்கள் மாநாடுகள் மூலம் 5.42 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
"ஆனால், இதுவரையில் அது என்ன நிலையை - எப்படிப்பட்ட சூழ்நிலையை அடைந்திருக்கின்றது என்பது பற்றி, ஒரு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டுமென்று தொடர்ந்து நாங்கள் குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறோம். நாட்டு மக்களும் அதைத்தான் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கிறார்கள்.ஆனால், அதுகுறித்து எந்த அக்கறையும் எடுத்துக்கொள்ளாமல் வெளிநாட்டிற்கு ஏதோ பொழுதுபோக்குக்காக செல்வதுபோல் சென்றுள்ளனர்.
"எடப்பாடி பழனிசாமி தலைமையில் இருக்கும் அமைச்சரவையை அதிமுக அமைச்சரவை என்று சொல்லமுடியாது. சுற்றுலா அமைச்சரவைதான் என்று சொல்லவேண்டிய நிலையில் இன்றைக்கு இந்த ஆட்சி நடந்துகொண்டிருக்கிறது," என்றார் ஸ்டாலின்.

