சென்னை: சென்னையில் கணினி பொறியாளர் ஒருவரைக் காரில் கடத்திச்சென்று, கத்திமுனையில் அவரை நிர்வாணப்படுத்தி காணொளி எடுத்து பணம் பறித்த மூவர்் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.
சென்னை கே.கே.நகரைச் சேர்ந்த 30 வயது ஸ்ரீகுமார் என்ற கணினி பொறியாளர் தாம்பரத்தில் உள்ள ஐ.டி. நிறுவனம் ஒன்றில் வேலை பார்க்கிறார். இவர் நேற்று முன்தினம் கே.கே.நகர் போலிஸ் நிலையத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:
நான் எனது வீட்டில் இருந்து வடபழனியில் உள்ள வணிக வளாகத்துக்கு செல்ல 'ரேபிடோ செயலி' மூலம், 'பைக் டாக்சி'க்கு பதிவு செய்தேன். ஆனால் நீண்டநேரமாக பைக் டாக்சி வரவில்லை. சற்றுநேரத்தில் கார் ஒன்று வந்து நிற்க, மழையாக இருப்பதால் எங்கள் நிறுவனம் சார்பில் காரை அனுப்பிவைத்ததாக அதை ஓட்டிவந்த ஓட்டுநர் தெரிவித்தார்.
நானும் அதை உண்மை என்று நம்பி காருக்குள் ஏற, கார் வடபழனி நோக்கி செல்லாமல் கிண்டி நோக்கி சென்றது. இதனால் அதிர்ச்சியடைந்த நான் காரை ஏன் கிண்டி நோக்கி ஓட்டுகிறீர்கள் என்று கேட்டேன்.
அப்போது காரில் வந்தவர்கள் கத்தியைக்காட்டி மிரட்டி, நான் வைத்திருந்த ரூ.11 ஆயிரத்தை பறித்துக்கொண்டனர். சத்தம் போட்டால் கொன்றுவிடுவோம் என்றும், கத்தியை கழுத்தில் வைத்து மிரட்டினார்கள்.
பின்னர் எனது ஆடைகளை களைந்து என்னை நிர்வாணக் கோலத்தில் கைபேசியில் வீடியோ படமாக எடுத்தனர். பின்னர் என்னை காரில் அழைத்துச் சென்று எனது வீட்டின் அருகே இறக்கிவிட்டனர். அப்போது என்னை நிர்வாணமாக எடுத்த காணொளியை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுவிடுவோம் என்றும் இதைப்பற்றி போலிசில் புகார் கொடுக்கக்கூடாது என்றும் மேலும் ரூ.50 ஆயிரம் தரவேண்டும் என்றும் அவர்கள் மிரட்டிவிட்டு சென்றனர்.
பின்னர் அதே கும்பலைச் சேர்ந்த ஒருவர் எனது கைபேசியில் அழைத்து ரூ.50 ஆயிரம் பணத்தை உடனே கொண்டுவர வேண்டும் என்றும் இல்லாவிட்டால் நிர்வாணப் படத்தை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவோம் என்றும் மிரட்டினார். இதுதொடர்பாக விசாரணை நடத்தி சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கவேண்டும்,"என்று புகார் மனுவில் தெரிவித்திருந்தார்.
இதுதொடர்பாக கே.கே.நகர் போலிசார் நடத்திய விசாரணையில் ஸ்ரீகுமாரை செல்போனில் தொடர்புகொண்டு ரூ.50,000 கேட்டு மிரட்டிய நபரின் முகவரி தெரியவந்தது. அவரது பெயர் சரவணன் (23) என்றும் விருகம்பாக்கம் ஆற்காடு சாலையைச் சேர்ந்தவர் என்றும் தெரியவந்தது.
சரவணனை போலிசார் நேற்று கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில் விருகம்பாக்கத்தை சேர்ந்த காண்டிராக்டர் தமிழ்செல்வன் (26), ஆட்டோ டிரைவர் மணிகண்டன் (32) ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.
இவர்களில் தமிழ்செல்வன் திமுக பிரமுகர் என்று கூறப்படுகிறது. கைது செய்யப்பட்டுள்ள சரவணன், ஸ்ரீகுமாரை ஏற்கனவே பலமுறை பைக் டாக்சி மூலம் வெளியில் அழைத்து சென்றுள்ளார். ஸ்ரீகுமாரை கடத்திச்சென்று பணம் பறிக்கலாம் என்று சரவணன் திட்டமிட்டது தெரியவந்தது.
மிழ்செல்வன், மணிகண்டன் ஆகியோரின் உதவியோடு கடத்தல் திட்டத்தை நிறைவேற்றி உள்ளார். கைது செய்யப்பட்ட 3 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்படுவார்கள் என்று போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் நேற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

