கோவை: கோவையில் இலங்கை குண்டுவெடிப்பு பயங்கரவாதிகள் ஆறு பேர் ஊடுருவியிருப்பதாக கடந்த வாரம் உளவுத்துறை எச்சரித்திருந்தது. இதையடுத்து கோவையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு, அதிரடிப் படையினர் குவிக்கப்பட்டனர். மேலும் கோவை விமான நிலையத்துக்கு மூன்று அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டது. சில நாட்களுக்கு முன்பு கோவையில் பாதுகாப்பு தளர்த்தப்பட்டது.
ஆனாலும் கோவை விமான நிலையத்திற்கு மட்டும் தொடர்ந்து பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. விமான நிலையத்திற்கு வரும் வாகனங்கள் அனைத்தும் சோதனை செய்யப்பட்டு வருகின்றன. விமான நிலையத்துக்கு உள்ளே, வெளியே வரும் பயணிகள் மற்றும் பார்வையாளர்கள் கடும் சோதனைக்குப் பிறகே அனுமதிக்கப்படுகின்றனர். இந்த நிலையில் நேற்று காலை கோவை விமான நிலையத்தில் திடீரென வெடிகுண்டு சோதனை நடத்தப்பட்டது. வெடிகுண்டு சோதனை சிறப்புப் பிரிவு வீரர்கள் இந்த சோதனையை நடத்தினார்கள். இது குறித்து விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகளிடம் கேட்டபோது, இது வழக்கமாக நடைபெறும் சோதனை, இதனால் பயணிகள் பீதி அடைய அவசியமில்லை என்றார்.
இதற்கிடையே சென்னை விமான நிலையத்திலும் வெடிகுண்டு நிபுணர்களுடன் மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் தீவிர சோதனை மேற்கொண்டனர்.

