'ஒரே நாடு, ஒரே ரேஷன் திட்டத்தில் தமிழகம் சேரும்'

'ஒரே நாடு, ஒரே ரேஷன் திட்டத்தில் தமிழகம் சேரும்'

2 mins read

சென்னை: மத்திய அரசின் 'ஒரே நாடு ஒரே ரேஷன்' திட்டத்தில் தமிழகம் விரைவில் இணையும் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு கூறியுள்ளார்.

மக்கள் அனைவரும் தங்களது பகுதியில் செயல்பட்டு வரும் நியாய விலைக் கடைகளில் மட்டுமே ரேஷன் பொருட்களை வாங்கி வருகின்றனர். இந்த நிலையை மாற்ற 'ஒரே நாடு ஒரே ரேஷன்' என்ற திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.

இதன்படி நாட்டு மக்கள் அனைவரும் ரேஷன் அட்டை மூலம் தங்களது ஊரில் அல்லது எந்த நியாய விலைக் கடைகளிலும் ரேஷன் பொருட்களை பெற்றுக்கொள்ளமுடியும்.

இந்த திட்டத்தில் இதுவரை பதினான்கு மாநிலங்கள் இணைய முன்வந்துள்ளன.

ஆனால் திமுக உள்ளிட்ட கட்சிகள், மாநில உரிமைகள் பறிக்கப்படுவதாகக் கூறி இந்தத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இந்த நிலையில் செல்லூர் ராஜு வெளியிட்ட அறிக்கையில் தமிழகம் இத்திட்டத்தில் இணையப்போகிறது என்று கூறியுள்ளார்.

இதற்கிடையே மத்திய அரசின் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள வைகோ, அதில் தமிழகம் இணையக் கூடாது என்று வலியுறுத்தியுள்ளார்.

"தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் பொதுப் பகிர்வு முறையைச் சீர்குலைக்கவும் வடஇந்தியாவில் இருந்து புலம் பெயர்ந்து வரும் மக்களை ஊக்குவித்து, தமிழ்நாடு உள்ளிட்ட பிற தென்னக மாநிலங்களில் வலிந்து குடியேற்றுவதற்காகவும்தான், வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் பொதுப்பகிர்வு முறையில் எந்த மாநிலத்திலும் உணவுப் பொருட்களை வாங்கிக்கொள்ளலாம் என்று பாஜக அரசு ஒரே நாடு, ஒரே குடும்ப அட்டை திட்டத்தை செயல்படுத்த முனைந்துள்ளது," என்று வைகோ கூறியுள்ளார்.