திருப்பூர்: தமிழக முதல்வர் அறிவித்து இருப்பதைப் போல் தமிழகத்துக்கு லட்சக்கணக்கான கோடி ரூபாய் முதலீடுகள் வந்தால் திமுக சார்பில் முதலமைச்சருக்குப் பாராட்டு விழா நடத்தத் தயாராக இருப்பதாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திருப்பூரில் நடந்த ஒரு திருமண விழாவில் கலந்துகொண்ட ஸ்டாலின், அமெரிக்காவிற்குச் சென்று தமிழகத்தில் 220 தொழில் நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளதாக அங்கு அப்பட்டமான பொய் ஒன்றை முதல்வர் கூறியிருப்பதாக தெரிவித்தார்.
ஏற்கெனவே இரண்டு முறை நடத்தப்பட்ட உலக முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் சுமார் ரூ. 5 லட்சம் கோடி அளவுக்கு முதலீடுகளை ஈர்த்துள்ளதாகக் கூறும் தமிழக அரசு, எங்கே யாருக்கு வேலை அளித்துள்ளது எனக் கூற முடியுமா என அவர் கேள்வி எழுப்பினார். உண்மையிலேயே தமிழகத்துக்கு முதலீடுகளை முதலமைச்சர் பெற்றிருந்தார் என்று சொன்னால், திமுக சார்பில் தாங்களே அவருக்குப் பாராட்டு விழா நடத்தத் தயங்கப்போவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
அரசின் தவறான பொருளியல் கொள்கைகளால் கோவை, திருப்பூர் உள்ளிட்ட கொங்கு மண்டலங்களில் உள்ள தொழிற்சாலைகள், நிறுவனங்கள் எல்லாம் மூடப்பட்டு வருவதாக ஸ்டாலின் கவலை தெரிவித்தார்.

