சென்னை: முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் கைது செய்யப்பட்ட பிறகு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மத்திய அரசை தீவிரமாக எதிர்த்துப் பேசுவது கிடையாது என்று தமிழக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
சென்னை துறைமுகத்தில் நேற்று நடந்த கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் பிறந்த நாள் விழாவில் கலந்துகொண்ட அமைச்சர் பிறகு பேட்டியளித்தார்.
"திமுக தலைவர் ஸ்டாலினை பொறுத்த அளவில், சிதம்பரம் கைதுக்குப் பிறகு அவரது குரல் மிகவும் மென்மையாகி விட்டது. ஏனெனில் அடுத்தது தான் தான் என்ற ஒரு பயம் அவருக்கு வந்துவிட்டது. எனவே நானும் இருக்கிறேன் என்று காட்டிக்கொள்ள, பொது விநியோகத் துறை விவகாரத்தில் அவர் சாதாரணமாக வெறும் குரல் கொடுத்துள்ளார்.
"ப.சிதம்பரம் கைதுக்குப் பிறகு, ஸ்டாலின் மத்திய அரசை தீவிரமாக எதிர்த்து உள்ளாரா என்பதைத் தொலைக்காட்சி ஊடகங்களில் அவர் அளித்த பேட்டியைத் திருப்பிப் போட்டு பார்த்துக்கொள்ளலாம்," என்று அமைச்சர் கூறினார்.
திமுக தலைவர் ஸ்டாலின் இனிமேல் மத்திய அரசுக்கு எதிராக தீவிர எதிர்ப்பு நிலைப்பாட்டை எடுக்க மாட்டார் என்றே தான் கருதுவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

