தேனி: போலந்தில் விண்வெளி பயிற்சி முடித்து திரும்பிய தேனி வீராங்கனை உதயகீர்த்திகா, செவ்வாய் கிரகத்திற்கு ஆட்களை அனுப்பும் 'ககன்யான்' திட்டத்தில் தன்னையும் இணைத்துக் கொள்ள கேட்டு 'இஸ்ரோ' விஞ்ஞானிகளிடம் விண்ணப்பிக்கத் திட்டமிட்டுள்ளார்.
தேனி அல்லிநகரத்தைச் சேர்ந்த தாமோதரன் - அமுதா என்ற தம்பதியின் மகளான உதயகீர்த்திகா, 2015 முதல் 2019 வரை உக்ரேன் தேசிய ராணுவ விண்வெளி ஆய்வுப் பல்கலையில் விண்கலன் பராமரிப்புப் படிப்பை முடித்தார்.
பிறகு ஜூலை முதல்வாரத்தில் போலந்து நாட்டிற்குச் சென்று, விண்வெளி வீரர்களுக்கான சிறப்புப் பயிற்சியைப் பெற்றார். அங்குள்ள 'அனலாக்' விண்வெளி மையத்தில் 2 மாதங்களாக பயிற்சி பெற்று செப்டம்பர் 2ஆம் தேதி தேனி திரும்பினார்.
சந்திரனில் தனியாக இருந்து ஆய்வு மேற்கொள்ளும் பயிற்சி, வேற்று கிரகங்களில் தற்காத்து கொள்வதற்கான துப்பாக்கிச் சுடும் பயிற்சி, ஆக்சிஜனை சுவாசித்து ஆழ்கடலில் நீந்துகிற பயிற்சி, தரையிறங்கும்போது தேவைப்படும் பயிற்சி, வினாடிக்கு 8 கி.மீ. வேகத்தில் செல்லக்கூடிய ராக்கெட்டில் செல்லும் பயிற்சி எல்லாவற்றையும் வெற்றிகரமாக முடித்து விண்வெளி வீராங்கனைக்கான சான்றிதழைப் பெற்று தேனி திரும்பிய உதயகீர்த்திகா செவ்வாய் செல்ல விரும்புகிறார்.

