சென்னை: தமிழகத்தில் தூத்துக்குடி தொகுதியில் கடந்த ஏப்ரல் மாதம் நடந்த மக்களவைத் தேர்தலில், திமுக சார்பில் போட்டியிட்டு 300,000க்கும் அதிக வாக்குகள் பெற்று பெரும் வெற்றி பெற்றவர் கனிமொழி. இவரை எதிர்த்து பாஜக சார்பில் போட்டியிட்ட தமிழிசை தோல்வியைத் தழுவினார்.
பிறகு, கனிமொழி வெற்றிக்கு எதிராக தூத்துக்குடியைச் சேர்ந்த ஏ.சந்தானகுமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருந்தார். "நாடாளுமன்றத் தேர்தலில் கனிமொழி தாக்கல் செய்த வேட்புமனுவில் பல்வேறு விவரங்கள் மறைக்கப்பட்டுள்ளன. வேட்பு மனுவைத் தேர்தல் அதிகாரி ஏற்றுக் கொண்டதும் சட்ட விரோதமானது. எனவே கனிமொழி வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்க வேண்டும்" என்று அதில் ஏ.சந்தானகுமார் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், கனிமொழி, இந்திய தேர்தல் ஆணையம் ஆகியோருக்கு கோரிக்கைக் கடிதம் அனுப்ப உத்தரவிட்டு, வழக்கை இரண்டு வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.
இந்தச் சூழலில், தூத்துக்குடி தொகுதியில் கனிமொழியின் வெற்றிக்கு எதிராக தமிழிசை தொடர்ந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையில், வரும் 23ஆம் தேதிக்குள் கனிமொழி மற்றும் தேர்தல் ஆணையம் பதிலளிக்க கோரிக்கைக் கடிதம் அனுப்ப உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்குகள், கனிமொழியின் எம்பி பதவிக்கு வேட்டு வைத்துவிடும் அளவுக்குப் போகக்கூடும் என்று சிலர் தெரிவிக்கிறார்கள்.

