பழனிசாமி: வெளிநாட்டுத் தமிழ் தொழிலதிபர்களை வரவேற்போம்

பழனிசாமி: வெளிநாட்டுத் தமிழ் தொழிலதிபர்களை வரவேற்போம்

2 mins read

சென்னை: தமிழ்நாட்டில் தொழில் தொடங்க முன்வரும் வெளிநாடுவாழ் தமிழர்களை ரத்தினக் கம்பளம் விரித்து வரவேற்போம் என்று அமெரிக்காவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்.

தமிழகத்துக்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக கடந்த மாதம் 28ஆம் தேதி முதல் தொடர்ந்து 14 நாட்களுக்கு பல வெளிநாடு களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார் பழனிசாமி.

அமெரிக்காவில் நியூயார்க், சான்யூசே நகரங்களில் தொழில் முதலீட்டாளர்களைச் சந்தித்துப் பேசிய பழனிசாமி, மொத்தம் 35 புரிந்துணர்வு ஒப்பந்தங்களிலும் கையெழுத்திட்டார்.

இந்த ஒப்பந்தங்கள் மூலம் ரூ.5,080 கோடி முதலீடுகளும் 26,500 பேருக்கு வேலைவாய்ப்புகளும் உருவாகும் என்று கூறப்படுகிறது.

அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகரில் வெளிநாடுவாழ் தமிழர்களின் முதலீடுகளை ஈர்க்க ஏதுவாக 'யாதும் ஊரே' என்ற திட்டத்தினைத் துவக்கி வைத்து முதல்வர் பழனிசாமி பேசியபோது, "தமிழ்நாட்டில் தொழில் துவங்க முன்வரும் வெளிநாடுவாழ் தமிழ் மக்களை ரத்தினக் கம்பளம் விரித்து வரவேற்க காத்திருப்போம்.

"தமிழ்நாடு அரசு தொழில் துறையின்கீழ் இயங்கும் தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் இணையத்தளத்தில் 'யாதும் ஊரே' என்ற தனித்தரவு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

"நீங்கள் தமிழ்நாட்டில் தொழில் முதலீடு செய்ய விரும்பினால் அதற்கான வழிமுறைகளை எடுத்துக்கூறி ஒற்றைச் சாளர முறையில் அனுமதிகள் வழங்கப்படும்.

"முடியாததை முடியும் என சாதிக்கக்கூடிய திறமை படைத்தவர்கள் தமிழர்கள். அந்த சக்தி தமிழர்களுக்கு இருக்கின்றது.

"சாதிக்கப் பிறந்தவர்கள் இங்கே சாதித்துக்கொண்டிருக்கிறீர்கள். இதேபோல தமிழகத்திலும் சாதிக்கக்கூடிய நிலையை நீங்கள் உருவாக்கித் தரவேண்டும்.

"ஆயிரம் கோடி, இரண்டாயிரம் கோடி முதலீடு செய்து பெரிய தொழில்தான் செய்யவேண்டும் என்ற நிலை இல்லை. சிறிய, சிறிய தொழில்களில் முதலீடு செய்தால் கூட அதற்கும் தமிழ்நாடு அரசு உங்களுக்குத் துணை நிற்கும்.

"இந்த நாட்டிலே நீங்கள் இருந்தாலும் உங்கள் உள்ளம் எல்லாம் தமிழ்நாட்டில்தான் இருக்கும். ஆகவே, தாய் தமிழகத்திற்கு உங்களால் முடிந்த உதவிகளை நல்க வேண்டும்," என்றார் பழனிசாமி.