பொற்கொல்லர்கள் போராட்டம் நடத்த முடிவு

பொற்கொல்லர்கள் போராட்டம் நடத்த முடிவு

2 mins read

திண்டுக்கல்: தங்கம் விலை தொடர்ந்து நாளுக்கு நாள் உயர்ந்து வருவதால் நாங்கள் வேலையிழந்து வருகிறோம், எங்கள் பிழைப்பு ெபரிய சிக்கலுக்கு ஆளாகிவிட்டது என்று கூறி பொற்கொல்லர்கள் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.

இதுகுறித்து திண்டுக்கல், தேனி, கரூர் மாவட்டங்களை உள்ளடக்கிய மண்டல விஸ்வகர்ம ஒர்க்கர்ஸ் யூனியன் தலைவர் ஆனந்தன் விடுத்துள்ள அறிக்கையில், "தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் நகைகளைத் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வரும் பொற்கொல்லர் குடும்பங்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறது.

"இதே நிலை தொடர்ந்தால் பொற்கொல்லர் குலத்தொழில் அழிந்துவிடும். இதற்காக எந்த அரசியல் தலைவர்களும் குரல் கொடுக்கமாட்டார்கள்.

"ஏனெனில் தேர்தலில் அவர்களுக்கு வாக்களிக்க அமைப்புகளின் மூலம் பணத்தைப் பெற்றுக்கொண்டு நம்மை நாமே ஏமாற்றிக் கொள்கிறோம்.

"இதனால் பொற்கொல்லர்கள் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

"அத்துடன் தங்கள் குடும்ப நலனுக்காக அவர்கள் ஹோட்டல், பழ வியாபாரம் செய்யும் வகையில் கூலி வேலைக்குச் செல்லும் நிலையும் ஏற்பட்டுள்ளது.

"எனவே இதனைக் கருத்தில் கொண்டு மத்திய அரசின் கவனத்துக்கு எங்களின் பிரச்சினை களைக் கொண்டு செல்லும் வகையில் ஆர்ப்பாட்டம், போராட்டம், உண்ணாவிரதங்களை நடத்த முடிவு செய்துள்ளோம்.

"மத்திய அரசின் வருமான வரி அலுவலகம், தலைமை தபால் அலுவலகம், ரயில் நிலையம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அனைத்து தொழிலாளர்களும் ஒன்றுசேர்ந்து போராட வேண்டும்.

"கடந்த வாரம் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஒரு நாடகத்தில் தங்க நகை செய்யும் ஆசாரியை தரக்குறைவான வார்த்தைகளால் விமர்சித்துப் பேசிய நடிகையைக் கண்டித்தும் அந்த தொடரை நிறுத்தவும் நடவடிக்கை எடுக்கவேண்டும்," என்றும் தெரிவித்துள்ளார்.