103 வயதில் மலரும் நினைவுகளைப் பகிர்ந்து கொண்ட முன்னாள் மாணவர்

103 வயதில் மலரும் நினைவுகளைப் பகிர்ந்து கொண்ட முன்னாள் மாணவர்

1 mins read

சென்னை: சென்னையிலுள்ள மாநிலக் கல்லூரிக்கு வருகை தந்த 103 வயதாகும் முன்னாள் மாணவரான முதியவர் ஒருவர். தான் படித்த இந்தக் கல்லூரி முழுவதையும் சுற்றிப்பார்த்து, இளமையில் நடந்த மலரும் நினைவுகளை மாணவர்களுடன் பகிர்ந்துகொண்டார்.

சென்னை திருவல்லிக்கேணி யைச் சேர்ந்தவர் பார்த்தசாரதி. இவர் கடந்த 1938ஆம் ஆண்டு சென்னை காமராஜர் சாலையில் உள்ள மாநிலக் கல்லூரியில் இளங்கலை பொருளியல் பட்டப்படிப்பு பயின்றுள்ளார்.

பின்னர் டெல்லியில் 30 ஆண்டுகளுக்கும் மேல் பணியாற்றி ஓய்வுக்குப் பின் மீண்டும் சென்னைக்கு வந்துள்ளார்.

103 வயதிலும் யாருடைய உதவியும் இன்றி தானே சுயமாகத் தன்னுடைய பணிகளைச் செய்து வரும் இந்த முதியவர், கடந்த வியாழனன்று ஆசிரியர் தினத்தையொட்டி தான் படித்த கல்லூரிக்கு வருகை தந்தார்.

பின்னர் தான் பயின்ற பொருளியல் துறை வகுப்பிற்குச் சென்று, தான் முன்பு அமர்ந்த அதே இடத்தில் அமர்ந்து மற்ற மாணவர்களுடன் பகிர்ந்துகொண்டார்.

கல்லூரிக் காலத்தில் தான் செய்த குறும்புக் கதைகளையும் கூறிய அவர், இன்றைய உலகில் வெறும் கல்லூரிப் படிப்பு மட்டும் போதாது என்றும் உலக அறிவையும் நவீன தொழில்நுட்ப அறிவையும் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் அவர் இன்றைய மாணவர்களுக்கு அறிவுரை கூறி விடைபெற்றுச் சென்றார்.