தமிழகத்தில் பரவிய டெங்கி; 1,700 பேருக்கு சிகிச்சை

தமிழகத்தில் பரவிய டெங்கி; 1,700 பேருக்கு சிகிச்சை

2 mins read

சென்னை: தமிழ்நாட்டில் வேகமாகப் பரவி வரும் டெங்கிக் காய்ச்சல் காரணமாக அரசு, தனியார் மருத்துவமனைகளில் ஏராளமான நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சுகாதாரத்துறையினர் இதுவரை எடுத்த கணக்கெடுப்பின்படி 1,700 பேர் இந்தக் காய்ச்சல் பாதிப்புக்காக சிகிச்சை பெற்றது தெரிய வந்துள்ளது.

இந்நிலையில் இக்காய்ச்சலைக் கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் சுகாதாரப் பணியாளர்கள் தீவிர முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

இதுகுறித்து பொது சுகாதாரத்துறை இயக்குநர் டாக்டர் குழந்தைசாமி கூறியபோது, "டெங்கிக் கொசுக்களை ஒழிக்கும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

"காய்ச்சல் பாதிப்புகளைத் தீவிரமாகக் கண்காணித்து வருகிறோம். தற்போது பெய்து வரும் மழையால் காய்ச்சல் பாதிப்பு அதிகமாக உள்ளது. அதனால் அனைத்து மருத்துவமனைகளிலும் நோயாளிகளுக்கு மலேரியா, டைபாய்டு, டெங்கி, எலிக்காய்ச்சல் பரிசோதனைகளைச் செய்வதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

"சென்னையிலும் புறநகர்ப் பகுதிகளிலும் டெங்கிக் காய்ச்சலை தீவிரமாகக் கண்காணித்து வருகிறோம். அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

"கொசுக்கள் உற்பத்தியாவதை தடுக்க வீடுகளில், காலிமனைகளில் பயன்படுத்தப்படாத பொருட்கள், டயர், தேங்காய் சிரட்டை, பெயின்ட் வாளி உள்ளிட்ட மழைநீர் தேங்கக்கூடிய பொருட்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

"தமிழகம் முழுவதும் ஜனவரி முதல் ஆகஸ்ட் வரையில் டெங்கி பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,800. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் குறைவாகும்.

"கடந்த வருடம் மொத்தம் 4,800 பேர் பாதிக்கப்பட்டனர். தற்போது டெங்கி கட்டுக்குள் இருக்கிறது.

"இருப்பினும் உள்ளாட்சி, சுகாதாரம், கல்வி, வருவாய் உள்ளிட்ட துறை ஊழியர்களுடன் இணைந்து முன் எச்சரிக்கை, தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன," என்று அவர் கூறினார்.

உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் டெங்கி, தொற்றுநோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தை சென்னையில் நடத்தினர்.

இதைத்தொடர்ந்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "தமிழகத்தில் வடசென்னை, தர்மபுரி உள்பட சில மாவட்டங்களில் டெங்கிக் காய்ச்சல் அறிகுறி சிலருக்கு ஏற்பட்டது. மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருவதால் அவர்களது உடல்நிலை தேறி உள்ளது. இதனால் உயிரிழப்புகள் எதுவும் இல்லை.

"உள்ளாட்சி அமைப்புகளால் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவு 0.2 இருப்பதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உறுதி செய்வதுடன் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர் குறித்த விவரங்களை சுகாதாரத்துறையினருக்கு உடனுக்குடன் தெரிவிக்கவேண்டும்.

"பொதுமக்கள் தங்கள் சுற்றுவட்டாரப் பகுதியை கொசுக்கள் உருவாகாத வகையில் பராமரிப்பதுடன், அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு தரவேண்டும்," என்று கூறினார்.