ஆலந்தூர்: கிண்டி அண்ணா சாலையில் உள்ள தனியார் மகளிர் கல்லூரி அருகே விபத்தில் மூன்று மாணவிகள் பலியான சம்பவம் குறித்து லாரி ஓட்டுநர் ராஜேந்திரனுக்கு ஐந்தாண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
சம்பவத்தன்று மாலை கல்லூரி அருகே மாணவிகள் கும்பலாக நின்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு தாறுமாறாக வந்த ஒரு டேங்கர் லாரி மாணவிகள் மீது பயங்கரமாக மோதியது.
விபத்தில் காயத்ரி, சித்ரா, ஆஷா ஸ்ருதி ஆகிய மூன்று மாணவிகள் உயிரிழந்தனர். மேலும் ஐவர் காயம் அடைந்தனர். இந்த சம்பவம் கடந்த 2016ஆம் ஆண்டு அக்டோபர் 13ஆம் தேதி நடைபெற்றது.
கிண்டி போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலிசார் டேங்கர் லாரி ஓட்டுநர் ராஜேந்திரனைக் கைது செய்தனர். அவர் மீது சென்னை மகிளா நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி, ராஜேந்திரனுக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனையும் ரூ.25,500 அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.

