திருச்சி: திருச்சி விமான நிலையத்திற்கு வரும் பயணிகள் தங்கத்தை விதவிதமான வழிகளில் கடத்தி வருகின்றனர்.
தங்கத்தைப் பொடிசெய்து கடத்துவது, பற்பசை கூழ் போல் கடத்துவது, உடலில், உடைமைகளில் மறைத்துக்கொண்டு வரு வது என 'அயன்' திரைப்படத்தை மிஞ்சும் அளவுக்கு தங்கத்தை விதவிதமாக கடத்தி வரும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.
திருச்சி விமான நிலையத்தில்கடந்த ஆறு மாதத்தில் பிடிபட்ட கடத்தல் தங்கத்தின் அளவு 30 கிலோவைத் தாண்டிவிட்டது.
கடந்த ஆறு வருடத்தில் மட்டும் 100 கோடி ரூபாய் மதிப்புக்கும் மேலான கடத்தல் தங்கம் திருச்சி வழியாகச் சென்றுள்ளதாகவும் கடந்த ஒரு மாதத்தில் 10 கோடி மதிப்பிலான தங்கம் சிக்கியுள்ளதாகவும் ஊடகத் தகவல்கள் தெரிவித்துள்ளன.
கடந்த 6ஆம் தேதி கோலாலம்பூரில் இருந்து துபாய்-கொழும்பு வழியாக திருச்சி வந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் 1 கிலோ 221 கிராம் தங்கத்தை நால்வர் மறைத்துக் கடத்தி வந்தனர்.
விசாரணையில் அவர்கள் சென்னையைச் சேர்ந்த பைசல், சுல்தான், இப்ராஹிம், ஜாஹிர் உசேன், ராமநாதபுரம் முகமது யூசுப் என்பது தெரியவந்தது.
இதையடுத்து நால்வரையும் கைது செய்த அதிகாரிகள், அவர்களிடம் இருந்த 1.31 கோடி மதிப்பிலான தங்கத்தைப் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.
இதேபோல், கடந்த திங்கட்கிழமை மலேசியாவிலிருந்து திருச்சி வந்த சென்னையைச் சேர்ந்த ஜும்மா கான் என்பவர் கணினியில் மறைத்துவைத்திருந்த 458 கிராம் தங்கம் பிடிபட்டது.
கடந்த ஆகஸ்ட் மாதம் சிங்கப்பூரிலிருந்து விமானத்தில் வந்த கடலூர் மாவட்டம் திட்டக்குடியைச் சேர்ந்த அன்பழகன், புதுக்கோட்டையைச் சேர்ந்த பழனியப்பன், துபாயிலிருந்து வந்த திருச்சியைச் சேர்ந்த அகமது ஃபைசல் உள்ளிட்ட பயணிகளிடமிருந்து 36 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 977 கிராம் தங்க நகைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
அதில் 776 கிராம் தங்கச் சங்கிலியாகவும் 251 கிராம் தங்கத்தை பற்பசை கூழ் போல் உருக்கிய நிலையில் எடுத்து வந்ததும் தெரியவந்தது.
கடந்த 1ஆம் தேதி மலேசியாவிலிருந்து வந்த மயிலாடுதுறையைச் சேர்ந்த முகமது அப்துல் நாசர் என்பவர் தனது உடைமையில் 300 கிராம் எடையுள்ள மூன்று தங்கக் கட்டிகளை மறைத்துக்கொண்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
கடந்த ஆகஸ்ட் மாதம் பக்திப் பழமாக வந்த திருப்பூரைச் சேர்ந்த ஜெயலட்சுமி என்பவரிடம் விசாரித்தபோது, அவர் தனது கைப் பையில் வைத்திருந்த விபூதி பொட்டலத்தில் 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 270 கிராம் எடையுள்ள தங்கச் சங்கிலிகளும் இரு தங்கக் கட்டிகளும் இருப்பது தெரிந்தது.

