மதுரை: தமிழகத்தில் ஆங்காங்கே ஒரு சில பகுதிகளில் தண்ணீர் பிரச்சினை இன்னும் இருந்துகொண்டுதான் உள்ளது. இந்த பிரச்சினைக்கு மழைநீரைச் சேமித்து வைப்பது ஒரு தீர்வாக அமையும்.
அந்த வகையில் அரசால் ஆழமாகத் தூர்வாரப்படாத நீர்நிலைகளை திமுக இளைஞர் அணி சீரமைக்கும் என்று மாநில இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
திமுக இளைஞர் அணியின் நிர்வாகிகள் தேர்வுக்கான நேர்காணலை மதுரை பைபாஸ் சாலையில் உள்ள ஓர் ஓட்டலில் நேற்று நடத்திய உதயநிதி ஸ்டாலின், கட்சியில் ஆற்றிய பணி, மக்கள் பணி குறித்து நேர்காணலின்போது 200க்கும் மேற்பட்டோரிடம் கேள்விகள் கேட்டார்.
இதைத்தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் கூறுகையில், "மதுரை நாராயணபுரம் சின்னப்புளியங்குளம் கண்மாயை திமுக இளைஞர் அணியினர் தூர்வாரி உள்ளனர்.
"மேலும் மக்கள் நடைபயிற்சி மேற்கொள்வதற்கு வசதியாகவும் அங்கு நடை பாதை அமைக்கப்பட உள்ளது.
"நான் இளைஞர் அணி செயலாளராகப் பொறுப்பேற்றவுடன் சென்னையில் நடந்த இளைஞர் அணி ஆலோசனைக் கூட்டத்தில் அரசு தூர்வாராத கண்மாய், குளங்களை திமுக இளைஞர் அணியினர் சீரமைக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டேன். அதனை ஏற்று மதுரையில் இந்த சின்னப்புளியங்குளம் கண்மாயைத் தூர்வாரி உள்ளனர். இது மகிழ்ச்சியாக உள்ளது.
"தமிழகத்தில் மொத்தம் 40,000 நீர்நிலைகள் உள்ளன. அதில் அரசு தூர்வாராத நீர்நிலைகளை திமுக இளைஞர் அணியினர் சீரமைப்பார்கள்," என்றார்.

